
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த சரப்ஜித் கவுர், ஷேகுபுராவில் உள்ள தனது கணவரின் வீட்டை அடைந்துள்ளார்.
சரப்ஜித் கவுரின் (நூர் பாத்திமா) வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷா மற்றும் அவரது கணவர் நசீர் ஹுசைன் ஆகியோர், சரப்ஜித் கவுரை வீட்டுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதித்ததாகவும், அதைத் தொடர்ந்து நேற்று இரவு லாகூரில் உள்ள பெண்கள் தங்குமிடத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
பிபிசிக்கு கிடைத்துள்ள எவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரியத்தின் (Evacuee Trust Property Board) அறிவிப்பின்படி, ‘சரப்ஜித் கவுரை அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்த முடியாது’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சரப்ஜித் கவுர் நவம்பர் 4 ஆம் தேதி சீக்கிய யாத்திரிகர்களுடன் பாகிஸ்தானுக்கு வந்தார், மேலும் அவரது விசா நவம்பர் 13 ஆம் தேதி காலாவதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் இந்தியா திரும்பவில்லை, இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு, மத்திய பஞ்சாபில் உள்ள ஷேகுபுராவில் வசிக்கும் நசீர் உசேன் என்பவரை மணந்தார்.
இதற்குப் பிறகு, சரப்ஜித் கவுர் பாகிஸ்தானில் தங்கி இஸ்லாம் மதத்திற்கு மாறினார், அதன் பிறகு அவரது பெயர் நூர் பாத்திமா என மாற்றப்பட்டது.
ஜனவரி 4 ஆம் தேதி நான்கானா சாஹிப் மாவட்டத்தில் சரப்ஜித் கவுர் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். வாகா எல்லை வழியாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன, ஆனால் கடைசி நேரத்தில் அவர் இந்தியா திரும்ப மறுத்தார்.
கடந்த மாதம், பாகிஸ்தானின் உள்துறை இணையமைச்சர் தலால் சவுத்ரி, சரப்ஜித் கவுரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்ற மனு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், “அவர் திருப்பி அனுப்பப்படாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” கூறியிருந்தார்.
லாகூர் உயர் நீதிமன்றத்தில் சரப்ஜித் கவுர் தாக்கல் செய்த மனுவையும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டு, “நீதிமன்றமும் அதையே கூறியுள்ளது, இதில் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவும் அடங்கும். இப்போது உள்துறை அமைச்சகம் இந்த விஷயங்களையெல்லாம் மனதில் கொண்டு ஒரு முடிவை எடுக்கும்” என்றார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
சரப்ஜித் கவுரும் நசீர் ஹுசைனும் 2016 ஆம் ஆண்டு டிக்டாக் வாயிலாக சந்தித்ததாகவும், இருவரும் பல சந்தர்ப்பங்களில் விசாவுக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் சட்டப்பூர்வ காரணங்களின் அடிப்படையில் அவர்களுக்கு விசா வழங்கப்படவில்லை என்றும் விசாரணை முகமைகள் கண்டறிந்தன.
நவம்பர் மாதம் பாகிஸ்தான் சென்ற சரப்ஜித் கவுர்
பட மூலாதாரம், Ahmad Pasha
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி சீக்கிய யாத்திரிகர்கள் குழுவுடன் பாகிஸ்தான் சென்ற சரப்ஜித் கவுரின் விசா காலம் நவம்பர் 13 உடன் முடிவடைந்தது.
எனினும், அவர் இந்தியா திரும்பவில்லை. இதற்கிடையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஷேக்ஹுபுராவைச் சேர்ந்த நசீர் ஹுசைன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சரப்ஜித் பாகிஸ்தானிலேயே தங்கினார்.
ஜனவரி 4-ஆம் தேதி, சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோர் இருப்பிடம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, அந்நாட்டு உளவுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சிறுபான்மை விவகார அமைச்சர் ரமேஷ் சிங் அரோரா பிபிசி உருதுவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, சரப்ஜித் கவுர் அவரது பாகிஸ்தானிய கணவருடன் காவலில் வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ரமேஷ் சிங் அரோராவின் கூற்றுப்படி, காவல்துறையினரும் உளவுத்துறை அதிகாரிகளும் இணைந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர்.
தம்பதியை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்
கடந்த நவம்பர் மாதம், சரப்ஜித் கவுரின் மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், அவரைத் துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
சரப்ஜித்தின் வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா கூறுகையில், கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பஞ்சாப் போலீசார் சரப்ஜித் மற்றும் நசீரின் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் இருவரையும் தேடி வந்த போலீசார் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா, சரப்ஜித் கவுர் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் காவல்துறை தலையிடக் கூடாது என்று இந்த மேல்முறையீட்டு மனுவில் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.
இருப்பினும், இந்தியப் பெண்ணையோ அல்லது அவரது பாகிஸ்தானிய கணவரையோ காவல்துறை துன்புறுத்தவில்லை என்று ஷேக்ஹுபுரா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராணா யூனுஸ் பிபிசி உருதுவிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், காவல்துறைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
“இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது, எனவே பல விசாரணை அமைப்புகள் இதனை ஆய்வு செய்து வருகின்றன. எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் பாகிஸ்தான் சட்டத்தின்படியே அமையும்” என்று அவர் கூறினார்.
இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம்
பட மூலாதாரம், Police
சரப்ஜித் கவுர் நவம்பர் 4 ஆம் தேதி சீக்கிய யாத்திரிகர்களுடன் பாகிஸ்தானுக்கு வந்தார், மறுநாள் பாபா குருநானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு நான்கானா சாஹிப்புக்குச் செல்ல இருந்தார்.
இருப்பினும், நவம்பர் 7 ஆம் தேதி ஷேக்ஹுபுராவின் நீதித்துறை நடுவருக்கு அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, பாகிஸ்தானுக்கு வந்த பிறகு, அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாறி, நசீர் ஹுசைன் என்ற பாகிஸ்தான் குடிமகனை மணந்தார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருமணச் சான்றிதழின்படி, நசீர் ஹுசைனுக்கு 43 வயது, சரப்ஜித் கவுருக்கு 48.5 வயது. திருமணச் சான்றிதழின்படி, வரதட்சணை பத்தாயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
நசீர் ஹுசைன் ஏற்கெனவே திருமணமானவர் என்றும், இரண்டாவது திருமணத்திற்கு அவருக்கு அனுமதி தேவையில்லை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், PRADEEP SHARMA/BBC
‘ ஒன்பது ஆண்டுகளாக அறிந்திருந்தார்’
சரப்ஜித் பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கபூர்தலா காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 2,000 சீக்கிய யாத்ரீகர்கள் கொண்ட குழுவில் ஒருவராக சரப்ஜித் பாகிஸ்தான் சென்றிருந்தார். 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அந்தக் குழுவினர் நவம்பர் 13-ஆம் தேதி இந்தியா திரும்பினர், ஆனால் சரப்ஜித் கவுர் அவர்களுடன் வரவில்லை.
பிபிசி பஞ்சாபி செய்தியின்படி, கபூர்தலா உதவி காவல் கண்காணிப்பாளர் தீரேந்திர வர்மா, தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியதாக நவம்பர் மாதம் தெரிவித்தார். சரப்ஜித் கவுர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது மற்றும் திருமணம் செய்து கொண்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று வர்மா தெரிவித்தார்.
இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, சரப்ஜித் விவாகரத்து பெற்றவர் என்பதும், முந்தைய திருமணத்தின் மூலம் அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.
கபூர்தலா மாவட்டத்திலுள்ள தல்வண்டி சௌத்ரியன் கிராமத்தின் காவல் ஆய்வாளர் நிர்மல் சிங்கின் கூற்றுப்படி, இது குறித்து கிராம பஞ்சாயத்துத் தலைவரிடம் (சர்பஞ்ச்) இருந்து தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா பிபிசி-யுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.
அதில் சரப்ஜித் பேசுவதைக் கேட்க முடிகிறது. தான் இந்தியாவில் விவாகரத்து பெற்றுவிட்டதாகவும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாறி நசீர் ஹுசைனைத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
மேலும் நசீர் ஹுசைனைத் தனக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும் என்று சரப்ஜித் தெரிவித்திருந்தார்.
வழக்கறிஞர் அகமது ஹாசன் பாஷா கூறுகையில், ‘சரப்ஜித்தும் நசீரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்ததாகவும், ஆறு மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாகவும்’ தெரிவித்திருந்தார்.
அவர்கள் இருவரும் சட்ட ரீதியான உதவிக்காகத் தன்னிடம் வந்ததாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு