
குஷ்பூ, சத்யராஜ்
தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகரான சரத் பாபு, நேற்று மதியம் 1.32 மணிக்கு காலமான நிலையில், இன்று அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினி காந்த், சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, சரத் குமார் உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், பொதுமக்களும் சென்னையில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த நடிகர் சரத் பாபு 1973ஆம் ஆண்டில் ராமராஜ்ஜியம் எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தார். இயக்குநர் பாலச்சந்தர் நடிகர் சரத் பாபுவை பட்டினப் பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முள்ளும் மலரும், சலங்கை ஒலி, அண்ணாமலை, முத்து உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
திரையுலகினர் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வரும் வேளையில், நடிகை குஷ்பூ சரத் பாபுவின் மறைவினைப் பற்றியும், அவரது நினைவலைகளையும் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்டார்.
“ நானும், நடிகர் சரத் பாபுவும் “சின்ன கிருஷ்ணடு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் 1986இல் ஒன்றாக நடித்தோம். சரத் பாபு எனக்கு உற்ற துணையாகவும் ஒரு மூத்த சகோதரனாகவும் தான் படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொண்டார். அவர் என்னுடன் இருப்பது பாதுகாப்பான உணர்வைத் தரும். மிகவும் நல்ல மனிதர். எவருடைய மனது புண்படும்படியோ பிறரை காயம்படுத்தும் விதத்திலோ அவர் நடந்து கொள்ள மாட்டார். நான் அவரிடம் இப்போது நெருக்கமாக இல்லாவிட்டாலும் எனது உடல்நலனை பேணக்கூடியவராக எப்போதும் இருந்தார் என்பதை நான் அறிவேன். மயில் சாமி, மனோபாலா, இப்போது சரத் பாபு என மூத்த நடிகர்கள் ஒவ்வொருவராக மண்ணை விட்டு செல்கிறார்கள். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவதொரு நாளில் இவ்வுலகை விட்டு செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் இத்தனை சீக்கிரமாக பிரிவார்கள் என நினைக்கும் போது தான் மனது வலிக்கிறது,”என்று குஷ்பு கூறினார்.
மேலும் அவர், “நான் எனது அரசியல் பணிகள் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் சரத் பாபு மறைவுச் செய்தியை கேட்டபோது உடனடியாக அவரை பார்க்க என்னால் செல்ல முடியவில்லை. இன்று மாலையில் அவரது வீட்டிற்கு சென்றேன். ஆனால் அதற்குள் அவரது உடல் இறுதி சடங்குகள் முடிந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்று கூறி உருக்கமாக தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
நடிகர் சத்யராஜ் மறைந்த நடிகர் சரத் பாபு பற்றி பேசும்போது, “சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பில் “சந்திப்பு” என்ற திரைப்படத்தில், சிவாஜி, பிரபு, சரத் பாபு அனைவரும் இணைந்து நடித்த நாட்களை மறக்க முடியாது. சரத் பாபு என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது அவரது அதிர்ந்து பேசாத பண்பு தான். நானும், சரத் பாபுவும் நடிக்க வந்த காலகட்டம் அது. சரத் பாபுவின் உடல் வாகு, நிறம், முடி என அனைத்தையும் பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன். நான் அவரை எப்போதும் இந்தி நடிகர் தர்மேந்திராவுடன் ஒப்பிட்டு, தமிழ் சினிமாவின் தர்மேந்திரா சரத் பாபு என அழைப்பேன்,” என்றார்.
சரத் பாபுவுடன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றையும் சத்யராஜ் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
‘சந்திப்பு’ திரைப்படத்தில் சிவாஜி, பிரபு, சரத் பாபு உள்ளிட்டோர் கதைப்படி நல்லவர்களாகவும், நான் கெட்டவனாக, வில்லனாக நடித்தேன். சரத் பாபு பொதுவாகவே தனது படங்களில் நடனமாட மாட்டர். ஆனால், அந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பு சரத்பாபு நடனமாடுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது அவரிடம், நான் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, என்னைப் பார்த்தீர்களா கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வில்லனாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் நடனமாடி துன்பப்படுகிறீர்கள் என கிண்டலாக பேசினேன்,” என்றார்.
“சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் தகவல் வருவதற்கு முன்பே நான் வேறொரு படப்பிடிப்புக்காக மும்பை சென்று கொண்டிருந்தேன். அதனால் அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரது மறைவுச் செய்தியால் அதிர்ச்சியடைந்து இருக்கிறேன்,” என்றார் சத்யராஜ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: