தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் எடுத்த 206 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்க அணி அனாயாசமாக விரட்டி 19.3 ஓவர்களில் 210/3 என்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.
ஆகஸ்ட் 2022-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா வெல்லும் முதல் இருதரப்பு டி20 தொடர் இதுவே. ரீசா ஹென்றிக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் இப்போதுதான் அவர் தன் முதல் டி20 சதத்தை எடுக்கிறார். பாகிஸ்தானின் சயீம் அயூப் 57 பந்துகளில் 11 பவுண்ட்ரிகள் 5 சிக்சர்களுடன் 98 ரன்கள் எடுத்து சதம் எடுக்க வாய்ப்பு கிடைக்காமல் முடிய பாகிஸ்தான் 206/5 என்று முடிந்தது.
சயீம் அயூபின் சதத்தை ரீசா ஹென்றிக்ஸ் சதம் முறியடித்து விட்டது. ரீஸா ஹென்றிக்ஸ் 63 பந்துகளில் 7 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 4ம் நிலையில் பேட் செய்த வான் டெர் டசன் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விளாச இவரும் ரீசாவும் சேர்ந்து 83 பந்துகளில் 157 ரன்களை புரட்டி எடுத்தனர்.
வான் டெர் டசன் தன் 7வது டி20 அரைசதத்தை எடுத்தார். பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் வேகம் ஏற்றுவதை விடுத்து, யார்க்கர்களை வேகமாக வீசுவதை விடுத்து ஸ்லோ பந்துகளை இடையிடையே கலந்து வீசும் உத்தியை கைவிட்டு முழுக்க முழுக்க ஸ்லோ பந்துகளையே வீசியது தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாகப் போனது.
ஆனால் பாகிஸ்தான் தோல்விக்குப் பிரதான காரணம், ஸ்கோர் 206 ரன்களையும் தாண்டி சென்றிருக்க வேண்டும், ஆனால் 11வது ஓவர் முடிவில் 103/1 என்று இருந்த நிலையிலிருந்து 16வது ஓவரில் 136/4 என்று 33 ரன்களை மட்டுமே இடைப்பட்ட ஓவர்களில் எடுத்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததே.
ஆனால் 16 ஓவர்களுக்குப் பிறகு அடுத்த 4 ஓவர்களில் 60 ரன்கள் விளாசப்பட்டதற்குக் காரணம் சயீம் அயூப் கடைசி வரை நின்றதே. இவருடன் இர்பான் கான் 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 30 ரன்களை விளாசினார். அபாஸ் அஃப்ரீடி 1 பவுண்டரி 1 சிக்சருடன் 4 பந்துகல் 11 ரன்கள் எடுக்க ஸ்கோர் 206 ரன்கள் என்று உயர்ந்தது, ஆனால் இந்த ஸ்கோர் இந்தப் பிட்சில் போதாமல் போனது, தென் ஆப்பிரிக்கா வெளுத்துக் கட்டி டி20 தொடரை வென்றது.