சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் மாபெரும் சமையல் போட்டி, சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிறைவடைந்தது. விழுப்புரம், புதுச்சேரி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெற்ற போட்டியில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
சென்னை வடபழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் மொத்தம் 36 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் நடுவரான செஃப் தீனா, சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் ஜனனி, ஸ்ரீ ஜனனி கேட்டரிங் சர்வீஸ் சார்பில் M. S. ஹரீஷ், போட்டியாளர்கள் துர்கா பாய் மற்றும் உமா மோகன்தாஸ் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
இறுதிச் சுற்று இரண்டு பாகங்களாக நடைபெற்றது.’உணவே மருந்து’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரத்தில், ஸ்டார்டர், மெயின் கோர்ஸ், சைட் டிஷ் மற்றும் டெஸர்ட் என நான்கு உணவுகளைச் சமைக்க வேண்டும். பப்பாளி பூ வடை, மூலிகை அடை, சங்கு பூ ஜுஸ், நவரா கஞ்சி எனப் பல அசத்தலான பாரம்பர்ய மருத்துவ குணம் நிறைந்த ரெசிப்பிகளை போட்டியாளர்கள் சமைத்தார்கள்.
இந்நிகழ்வின் தொகுப்பாளர்கள் ஶ்ரீனீ மற்றும் பெளஷியா இணைந்து நிகழ்வை கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் கொண்டு சென்றனர். சின்னத்திரை பிரபலங்கள் நவீந்தர் மற்றும் பவித்ரன், ஆனந்தி, சாய் சக்தி ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவே போட்டியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
36 போட்டியாளர்களின் உணவுகளையும் ருசி பார்த்து மதிப்பெண் வழங்கினார் செஃப் தீனா. இறுதியாக, பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விகடன் குழுத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், சக்தி மசாலா சார்பில் ஜனனி, செளபாக்யா நிறுவனத்தின் இயக்குநர் வரதராஜன் மற்றும் சுஜாதா வரதராஜன், கோல்ட் வின்னர் நிறுவனத்தின் சுல்தான், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ் மனிதவள மேலாளர் மனோகரன் ஆகியோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
இறுதியாக இந்த சீசனின் டாப் 3 போட்டியாளர்களை அறிவிக்க வேண்டிய நேரம் வந்தது. செஃப் தீனா போட்டியாளர்கள் பெயர்களை அறிவிக்க, விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், சத்யா ஏஜென்ஸின் இயக்குநர் ஜென்சன் ஆகியோர் உடனிருந்தனர். முதல் பரிசை புதுச்சேரியைச் சேர்ந்த பிரேமா இனியன் வென்றார். இவருக்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுக் கூப்பன், விகடன் சார்பில் சான்றிதழ், கேடயமும் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு வென்ற ஈரோட்டைச் சேர்ந்த சந்திரபிரபாவுக்கு 30,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுக்கூப்பன், விகடன் சார்பில் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசை வென்ற கோவையைச் சேர்ந்த மஞ்சுளா குமாருக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுக்கூப்பன், விகடன் சார்பில் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.