தேசிய அணி, ஜூனியர் அணி, சமூக குழு, பிராந்திய அணி, ராணுவ அணி என ஐந்து பிரிவுகளில் குழுவாகவும் தனிநபர் பிரிவில் அதாவது சிற்பக்கலை போட்டியில் தனியாகவும் கலந்த கொள்ளமுடியும். குழுப் போட்டியில் தனிபராக கலந்து கொள்ள முடியாது. அதே சமயம் ஜூனியர் அணியில் உள்ள கலைஞர்கள் 25 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
சமையல் போட்டியில் பங்கேற்பாளர்களை விட அதிக அளவு பயத்தில் இருப்பவர்கள் நடுவர்கள். அதிலும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் சொல்லவே வேண்டாம். ஒரு கலைஞரிடம் இருந்து இன்னொரு சமையல் கலைஞர் மேசைக்கு செல்லும் போது முன்பு சாப்பிட்ட உணவின் சுவையை மறந்து புதிதாக ருசி பார்த்து மதிப்பெண் இடுவது எல்லாம் லேசான காரியம் அல்ல.
அப்படிப்பட்ட நிலையில் சுவையை மட்டும் பிரதானமாக வைத்து இங்கு பதக்கம் அளிக்கப்படுவதில்லை. எட்டு பிரிவுகளாக உணவு வகைகளையும், சமையல் கலைஞர்களையும் பரிசோதிக்கப்படுகிறார்கள். அவை படைப்பாற்றல், நேர மேலாண்மை, உணவின் சுவை, சமையலறை தூய்மை, சமையலை வழங்குதல், பணியின் துல்லியம், பணி அமைப்பு மற்றும் ஒட்டு மொத்த செயல்திறன் எனப் பிரிக்கப்பட்டு மதிப்பெண் இடுகிறார்கள். இதன் பொருட்டே வெற்றியாளரும் தேர்தெடுக்கப்படுகிறார்.