திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திண்டுக்கல்லில் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மாணவி மரணம் சம்பவத்தில் காவல்துறை முழுமையான விசாரணைக்கு பிறகுதான் தெளிவாக தெரியவரும். அந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கிராமத்தினர் கொஞ்சம் எழுச்சி அடைந்ததை குற்றம் என்று சொல்ல முடியாது. அவர்கள் கோபப்பட்டு உள்ளார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள். காவல்துறை அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார். மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் எப்படி செல்கிறார். மாநில உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தெரியாமல் எப்படி செல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.