தொடர்ந்து எட்டு மணிநேரத்திற்கு சமூகத் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஆற்றல் குறைவதற்கு வழிவகுக்கும் எனவும், இது எட்டு மணி நேரத்திற்கு உணவு இல்லாமல் இருப்பதற்குச் சமம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நமக்குள் சில உணர்வுகள் ஏற்படும். மேலும் உணவைத் தேடும் உணர்வும் ஏற்படும். இதையே பசி என்கிறோம். அதேபோல, ஒரு சமூக இனமாக நாம் வாழ்வதற்கு, மற்றவர்களும் தேவை. சமூகத்தொடர்பு இல்லாமல் வாழ்வது என்பது, உணர்வுப் பசியுடன் ஒப்பிடக்கூடியது. பசிக்கும்போது உணவின் மீது நாட்டம் வருவதைப் போலவே, சமூகத் தொடர்பின்றி தனிமையில் இருக்கும் போது நமது மூளையில் ஏக்கம் தூண்டப்படுகிறது. இந்த ஏக்கம் நம்மை மீண்டும் மற்றவர்களுடன் இணைக்கச் செய்கிறது.
நமக்குள் இருக்கும் உணர்வு, சமூகத்தோடு இணைய வேண்டும் என்றே அதிகம் விரும்பும் என்று தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், ’சமூகத்தில் உள்ள அனைவருடனும் சுமூகமான உறவு கொண்டிருக்க வேண்டும் என்பது பொதுவாக நாம் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. எனினும், இதன் பின்னால் இருக்கும் உளவியல் ரீதியான காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிட்டுச் சொல்ல முடியாது’ என்கின்றனர்.
இந்தச் சூழலில், கோவிட்-19 தொற்றுப் பரவலை தொடர்ந்து அமலில் இருந்த லாக்டவுன்களின் பின்னணியில், ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில், நீண்டகாலத் தனிமை மற்றும் சோர்வு ஆகியன, ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. மேலும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், குறைவான ஆற்றலேயே கொண்டுள்ளனர். இதே சூழ்நிலை நீடித்தால் அது அவர்களுக்குத் தீமையாக மாறலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.