கோவை: ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்தேன் என கூறியவர் சட்டம் ஒழுங்கை பற்றி பேசக்கூடாது’ என எடப்பாடியை விமர்சித்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில் முதல்வர் கொடநாடு தொடர்பாக பேசினார். அப்போது எடப்பாடி தைரியமாக பதில் சொல்லாமல், அமைதியாக வெளியே சென்றுவிட்டார். தைரியமாக எனக்கும் வழக்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறாமல் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல வெளியே சென்றுவிட்டார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்தேன் என கூறியவர் சட்டம் ஒழுங்கை பற்றி பேசக்கூடாது. எடப்பாடி எதற்காக அடிக்கடி கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு வருகிறார் என தெரியவில்லை. எடப்பாடியை காட்டிலும், எஸ்.பி. வேலுமணி கொஞ்சமாவது புத்திசாலி. அவராவது எதற்காக அடிக்கடி கருப்பு சட்டை அணிகிறோம் என புத்திமதி சொல்லியிருக்கலாம். அதிமுகவில் மெகா கூட்டணி இல்லை. பாமக வெளியேறிவிட்டது. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில் இணைந்து செயல்படவே பன்னீர்செல்வம் தயாராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டம் ஒழுங்கு விவகாரம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்தவர் பேசக்கூடாது: எடப்பாடி மீது புகழேந்தி தாக்கு
Share