இந்தியா தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னணியில் உள்ளது.
ஹரியானாவில் பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்று 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இம்மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி தேவைப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர், ஹரியாணா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடக்கிறது. 10 ஆண்டுகள் கழித்து, சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பிறகு முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி தொடக்கம் முதலே முன்னிலை வகிக்கிறது.
ஹரியாணாவில் தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில், அதாவது மூன்றில் இரு பங்கு தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் அதன் பின்னர் பின்னடைவை சந்தித்தது. பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிகமாக முன்னணி வகிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தோல்வி
90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் பாஜகவும், பிடிபியும் தனித்துப் போட்டியிட்டன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆம் ஆத்மி கட்சி ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா நவ்ஷேரா தொகுதியில் தோல்வியடைந்தார்
ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா நவ்ஷேரா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்த தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சுரேந்திர குமார் சவுத்ரி 35,069 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால் ரவீந்திர ரெய்னா 27 ஆயிரத்து 250 வாக்குகள் பெற்றார். சுமார் 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.
ஹரியாணா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது – ஜெய்ராம் ரமேஷ்
பட மூலாதாரம், Getty Images
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், “ஹரியாணா தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது, ஆச்சர்யகரமானது, முரண்பாடானது. கள யதார்த்தத்திற்கு எதிராக உள்ளது. மாற்றத்தை விரும்பிய ஹரியாணா மக்களின் எண்ணங்களுக்கு எதிராக இந்த முடிவுகள் உள்ளன. இச்சூழலில், இன்று வெளியான இந்த தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை.” என தெரிவித்தார்.
மேலும், “குறைந்து மூன்று மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை குறித்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்தும் கடும் குற்றச்சாட்டுகள் எங்களுக்கு வந்துள்ளன. ஹரியாணாவில் எங்கள் கட்சியின் மூத்தவர்களிடம் இதுகுறித்து பேசி தகவல்களை திரட்டி வருகிறோம். அவற்றையெல்லாம் ஒன்றிணைத்து நாளை அல்லது அதற்கு மறுநாள் தேர்தல் ஆணையத்திடம் வழங்குவோம். ஹரியாணாவில் இன்று நாம் கண்டிருப்பது, சூழ்ச்சிக்கான வெற்றி, மக்களின் விருப்பத்தைத் தகர்த்ததற்கான வெற்றி மற்றும் இது வெளிப்படையான ஜனநாயக செயல்முறைகளுக்குக் கிடைத்த தோல்வி” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
தோல்வியை தழுவிய மெகபூபா முஃப்தியின் மகள்
பட மூலாதாரம், ANI
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தியின் மகளான இல்டிஜா முஃப்தி, தான் போட்டியிட்ட ஸ்ரீகஃப்வாரா – பீஜ்பெஹரா தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.
அத்தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பஷீர் அகமது ஷா வீரி வெற்றி பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே 9,770 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.
இத்தொகுதியில், 1,552 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என, மெகபூபா அறிவித்திருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் அனந்த்நாக்-ராஜோரி தொகுதியில் போட்டியிட்ட மெகபூபா தோல்வியை தழுவினார்.
காங்கிரஸ் புகாருக்கு தேர்தல் ஆணையத்தின் பதில்
பட மூலாதாரம், ANI
ஹரியாணா தேர்தல் முடிவுகளை இணையதளத்தில் மெதுவாக அப்டேட் செய்வதாக காங்கிரஸ் எழுப்பிய புகாருக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
கடந்த ஜூன் 4, 2024 அன்று, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானபோதும் இதேபோன்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் எழுப்பியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் அப்புகாரை தேர்தல் ஆணையம் மறுத்தது.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் கூறுகையில், “தேர்தல் விதிமுறைகளின்படி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காங்கிரசின் மனுவில் ஹரியாணா தேர்தல் முடிவுகள் இணையதளத்தில் மெதுவாக பதிவிடப்படுவதாக தெரிவித்துள்ளது. ஹரியாணா, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதிவான வாக்குகள் வேட்பாளர்களின் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளது.
காங்கிரசின் குற்றச்சாட்டை மறுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் சுமார் 25 சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் அப்டேட் செய்யப்படுவதாகவும் விதிமுறைகளின்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக ஊடக பக்கத்தில், ஹரியாணா தேர்தல் முடிவுகள் வேண்டுமென்றே தாமதமாக வெளியிடப்படுவதாக தெரிவித்தெருந்தார். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றையும் அளித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் நிலவரம் குறித்து கேஜ்ரிவால் கருத்து
பட மூலாதாரம், ANI
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் ஹரியாணா, ஜம்மு மற்றும் காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய தேர்தல் முடிவுகளிலிருந்து ஒருவர் அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்ற பாடத்தை தந்திருப்பதாக அவர் கூறினார்.
அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “எந்தவொரு தேர்தலையும் லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்றைய தேர்தல் முடிவுகளிலிருந்து ஒருவர் அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்ற பாடத்தை தந்திருக்கிறது” என்றார்.
“எல்லா தேர்தல்களிலும் அனைத்து தொகுதியும் கடினமானதுதான். எல்லோரும் கடினமாக உழைக்க வேண்டும். உள்மட்ட அளவில் எந்த சண்டையும் இருக்கக் கூடாது” என்றார்.
ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.
வெற்றி நிலவரம்
பட மூலாதாரம், ANI
ஹரியாணா மாநிலம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் நிலவரங்கள் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருக்கின்றனர்.
ஹரியாணாவில் ஜிண்ட் தொகுதியில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணன் லால் மிதா வெற்றி பெற்றுள்ளார். நு (Nuh) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஃப்தப் அகமது வெற்றிபெற்றுள்ளார்.
அதேபோன்று, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகாட் வெற்றி பெற்றார்.
ஹரியாணாவின் தற்போதைய முதலமைச்சரான பாஜகவின் நயாப் சிங் சைனி லட்வா தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 16,054 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உத்தம்பூர் கிழக்கு, செனானி, பிலாவர், பசோலி, மேற்கு ஜம்மு, வடக்கு ஜம்மு ஆகிய தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.
அதேசமயம், குரேஸ், ஹஸ்ரத்பால், ஸதிபால், தம்ஹல் ஹாஞ்சி பொரா ஆகிய தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தான் போட்டியிட்ட புட்கம் மற்றும் கண்டேர்பல் என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
பட மூலாதாரம், Reuters
ஹரியாணா தேர்தல் முடிவுகளை இணையதளத்தில் வெளியிடுவதில் தாமதம் செய்யப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றையும் காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள அவசர மனுவில், காலை 9 முதல் 11 வரையிலான இரண்டு மணிநேரத்தில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகள் அப்டேட் செய்யப்படுவது மெதுவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால், முழு நடைமுறையையும் பலவீனமாக்கும் வகையிலான கருத்துகள் பரவ வழிவகுக்கும் என அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். தீய எண்ணம் கொண்டவர்கள் வாக்கு எண்ணிக்கையில் செல்வாக்கு செலுத்த அவற்றை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தன் சமூக ஊடக பக்கத்தில், “மக்களவை தேர்தலைப் போலவே ஹரியாணா தேர்தல் முடிவுகளும் வேண்டுமென்றே தேர்தல் ஆணைய இணையதளத்தில் மெதுவாக அப்டேட் செய்யப்படுகிறது. (தேர்தல் ஆணைய) நிர்வாகத்தின் மீது பாஜக அழுத்தம் தர முயற்சிக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், “எங்களுடைய புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இதுவரை 10-12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளன. ஆனால், மூன்று முதல் நான்கு சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை விவரங்களே தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.” என்றார்.
வினேஷ் போகாட் வெற்றி
பட மூலாதாரம், ANI
ஹரியாணாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் வெற்றி பெற்றார்.
ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்த வினேஷ் போகாட், பின்னர் பாஜக வேட்பாளர் யோகேஷை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவந்தார்
இந்நிலையில், வினேஷ் போகாட் ஜூலானா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் காங்கிரசில் இணைந்தார். அவருடன் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரசில் இணைந்தார்.
கடந்த தேர்தலில் இத்தொகுதியில் ஜனநாயக ஜனதா கட்சியின் அமர்ஜீத் தண்டா வெற்றி பெற்றார்.
ஒமர் அப்துல்லா போட்டியிட்ட இரு தொகுதிகளில் நிலவரம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தான் போட்டியிட்ட புட்கம் மற்றும் கண்டேர்பல் என இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, புட்கம் தொகுதியில் ஒமர் அப்துல்லா சுமார் 18,000 வாக்குகளையும் மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் முன்தான்ஸீர் முகமது சுமார் 10,000 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் புட்கம் தொகுதியை ஒட்டிய பீர்வா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒமர் அப்துல்லாவின் தாத்தா ஷேக் அப்துல்லாவும் தந்தை ஃபரூக் அப்துல்லாவும் கண்டேர்பல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
கண்டேர்பல் தொகுதியில் ஒமர் அப்துல்லா சுமார் 15,000 வாக்குகள் பெற்றுள்ளார். அத்தொகுதியின் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் அகமது பீர் சுமார் 8,000 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
முன்னிலை நிலவரம் குறித்து பூபேந்திர சிங் ஹூடா கூறியது என்ன?
பட மூலாதாரம், ANI
ஹரியாணாவில் தற்போதைய நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளிலும் காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான பூபேந்திர சிங் ஹூடா, தங்கள் கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
தேர்தல் முன்னிலை நிலவரம் குறித்து அவரிடம் கேட்டபோது, “முடிவுகள் குறித்து எனக்கு தெரியும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறது” என்றார்.
முதலமைச்சர் பதவி குறித்து பாஜக முன்னாள் அமைச்சர் கருத்து
பட மூலாதாரம், ANI
ஹரியாணாவில் பாஜக அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அனில் விஜ், மாநிலத்தில் அக்கட்சியின் முகமாக அறியப்படுகிறார். அவர், தான் முதலமைச்சராக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் அனில் விஜ்.
மல்யுத்த வீரர்களின் போராட்டம் இத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சில பகுதிகளில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் மாநிலம் முழுதும் ஏற்படாது என்றும் கூறினார். ஊடகத்திடம் பேசிய அவர், “ (முதலமைச்சராவது குறித்து) மாநில தலைமை விரும்பினால் அது நிச்சயம் நடக்கும்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்
90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் முதன் முறையாக இங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கே நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாயின. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.
பட மூலாதாரம், ANI
முக்கிய கட்சிகள்
இந்த தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாக போட்டியிட்டன. பாரதிய ஜனதா, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தனித்து களம் கண்டன.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் இந்த தேர்தலில் களத்தில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஹரியாணா சட்டமன்ற தேர்தல்
ஹரியாணாவின் 15-வது சட்டமன்ற தேர்தல் இதுவாகும். அம்மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் அக்டோபர் 5 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 67.90 சதவீத வாக்குகள் பதிவாயின. சிர்சா மாவட்டத்தில் அதிகபட்சமாக 75.36 சதவீத வாக்குகள் பதிவானது. பரிதாபாத் மாவட்டத்தில் மிகக் குறைவாக 56.4 9சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
முக்கிய கட்சிகள்
பாரதிய ஜனதா கட்சி (பாஜக), காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய லோக் தளம்- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி , ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி ஆகியன இம்மாநிலத்தின் மூத்த கட்சிகள் ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முதல்வர் நயப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இம்மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் வெளிவந்த முடிவுகளைப் பார்க்கையில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்பது போல் தோன்றியது. ஆனால், படிப்படியாக அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கிய காங்கிரஸ், 9 மணியளவில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 22 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகித்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் நிலைமை மாறியது. பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸை விடவும் பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு