மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைமை வாய்ந்த சட்டநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வருகிற மே 24-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காகவே கோயில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அப்போது யாகசாலை அமைப்பதற்காகக் களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயிலின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டினர்.
அங்கே 2 அடி ஆழத்தில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா ஐயனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை அரை அடி முதல் 2 அடி வரை உயரம் உடையன. மேலும் 400க்கும் மேற்பட்ட, திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழிப் பதிகம் தாங்கிய தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.