கோவை: பச்சிலை பிரியாணி, தகைமான்காடி ஊறுகாய் – அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் அசத்தல்!

Share

ஆரோக்கியமும் அறுசுவையும் கொண்ட, பாரம்பர்ய முறையில் சமைக்கப்பட்ட  உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக அவள் விகடன் சார்பில் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நடந்து வருகிறது. மதுரை, திருச்சி, திருநெல்வேலியைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கோவையிலும் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 12 வயதுச் சிறுமி முதல் 85 வயது பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கைமணத்தைப் பறைசாற்றினர்.

Samayal Super Star

ஆரோக்கிய உணவுகள், வட்டார சிறப்புமிக்க உணவு வகைகள், பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள், குடும்பத்தில் வழிவழியாக வரும் பரம்பரை உணவுகள் என நான்கு அம்சங்களை மையமாக வைத்து இந்தப் போட்டி நடைபெற்றது.

மூன்று சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியின் முதல் சுற்றில் போட்டியாளர்கள் வீட்டிலிருந்தே சமைத்துக் கொண்டு வந்திருந்த உணவுகளைக் காட்சிப்படுத்தினர். அவற்றிலிருந்து சுவை, பதம், காட்சிப்படுத்தும் விதம் போன்றவற்றின் அடிப்படையில் செஃப் தீனா இரண்டாம் சுற்றுக்கான 10 போட்டியாளர்களைத் தேர்வு செய்தார்.

இரண்டாம் சுற்றில், போட்டியாளர்கள் போட்டி அரங்கிலேயே நேரடியாக சமைத்துக்காட்டினார்கள். இரண்டாம் சுற்றின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெற உள்ள மூன்றாம் கட்ட இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Samayal Super Star

கோவையில் நடைபெற்ற `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டியின் முதல் ரவுண்டில் பல வித்தியாசமான உணவு வகைகளைக் காண முடிந்தது. கொங்கு நாட்டின் பாரம்பர்யமான பள்ளிப்பாளையம் சிக்கனில் தொடங்கி ஃப்யூஷன் நாட்டுக்கோழி என்கிலாடஸ் வரை பல உணவுகளைச் சமைத்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பலாக்காய் சொதி, திருநீற்று பச்சிலை பிரியாணி, வெற்றிலை பூண்டு சாப்பாடு, கேரமல் புடிங், மூங்கில் அல்வா, முருங்கை இலை அடை, மஷ்ரூம் குனாபா, ஆரஞ்சு தோல் தொக்கு, கினோவா ரப்டி உட்பட பல வித்தியாசமான உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி அசத்தினர்.

இது மட்டுமல்லாமல், சங்க இலக்கியமான பொருநராற்றுப் படையில் குறிப்பிடப்படும் தகைமான்காடி எனும் ஒருவகை ஊறுகாய், கருடன் சம்பா அரிசியில் செய்த மாதுளம் பிஞ்சு சாதம் போன்ற உணவு வகைகளையும் செய்து அசத்தினர்.

Samayal Super Star

பலருக்கும் அதிகம் தெரிந்திராத மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டன. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ ரொட்டி, உடல் சூட்டைத் தணிக்கும் கற்றாழைப்பூ துவையல், பல்வேறு களி வகைகளையும் கொண்டு வந்திருந்தனர்.

வீட்டிலுள்ள சிறு சமையலறையில் சமைத்து, குடும்பத்தினர் மட்டுமே ருசித்து நன்றாக இருக்கிறது என்று சொன்ன வார்த்தைகளுக்கு பழகின பல இல்லத்தரசிகளுக்கு இந்தப் போட்டி மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல… பெண்களுக்கு இணையாக பல ஆண்களும் உற்சாகத்துடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.

சென்னையில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்பது ஹைலைட்!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com