ஒரு வயதே ஆன கோல்பி நிக்கல்சனுக்கு அவரின் தாய் பனிச்சறுக்குப் பலகை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். அவன் அதை வைத்து என்ன செய்யபோகிறானென்று தெரியாமல்தான் வாங்கி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் பார்க் சிட்டியில் வளர்ந்த அந்தக் குழந்தை, அங்குள்ள மலைகளின் மேடுகளில் பலகையுடன் நின்றுகொண்டிருக்கிறது. அப்படியே, பனியில் சறுக்குவதற்கு இருக்கும் தடைகளை நோட்டம் விடத் தொடங்கியது. சுற்றும் முற்றும் பார்த்து தயாரானதும் தனது உடை, போர்டுடன் கனவையும் சுமந்துகொண்டு தனது பனிச்சறுக்கலைத் தொடங்கியது அக்குழந்தை. அந்தக் குழந்தைக்குள் இருந்த கனவை அதன் தாயால் காணமுடிந்தது.
தாய் மட்டுமல்ல, அங்கே பயிற்சி பெறும் பல சாம்பியன் வீரர்கள் கண்களுக்கும் அது படாமலில்லை. பதின் பருவத்தின் தொடக்கத்தில், சாம்பியன் வீரர்கள் செய்வதைப் பார்த்து அவர்களைப் போலவே செய்ய பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான் கோல்பி. பார்க் சிட்டியின் மலைகளில் பரவிக்கிடக்கும் பனியில் எந்த மூலையிலும் கோல்பியைத் தடுக்கும் தடுப்பணை இருப்பதாகத் தெரியவில்லை. மலைகளில் சறுக்கும் அந்தச் சிறுவனுக்காக சிகரம் காத்துக்கொண்டிருந்தது. ஆனால், “Life is what happens to us when we are busy making other plans” என்னும் ஜான் லென்னானின் வாக்கியத்திற்கு ஏற்ப, கோல்பியும் ஒரு கொடூரத்தைச் சந்தித்தார்.
2016-ம் ஆண்டு. 16 வயது. காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நெடுநேர பயணத்தினால் அசதியில் சற்றே கண்ணயர்ந்தார் காரை ஒட்டிய கோல்பி. அப்போது நிகழ்ந்த விபத்தில், அவரது உடம்பில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது மண்டையோட்டில் 8 இடங்களில் முறிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட வலதுபுற மண்டையோடு முழுவதும் பலத்த காயமடைய, 3 நாட்களுக்கு செயற்கையாக கோமாவில் வைக்கப்பட்டார். தான் வாங்கிக்கொடுத்த பனிச்சறுக்கு பலகையுடன் வீட்டில் காத்திருந்த தாயும், சிம்மாசனத்தை ஒதுக்கி வைத்திருந்த சிகரமும், அன்பை அள்ளிக் கொடுக்கத் தயாராயிருந்த அன்பு உள்ளங்களும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்திலும், சோகத்திலும் ஆழ்ந்தன.