தமிழ்நாட்டில் கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளில் கலருக்காக ‘ரோடமைன் பி’ ரசாயனம் உணவுகளில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்துள்ளது தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத்துறை.
காரணம், ரோடமைன் பி ரசாயனம் கலக்கப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு, புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கோவாவில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கர்நாடக சுகாதாரத்துறையும் கோபி மஞ்சூரியனைத் தடை செய்திருப்பது, நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏன் இன்னும் தடைசெய்யப்படவில்லை? என பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் சூழலில், தமிழ்நாடு சுகாதாரத்துறையின் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம்…
“fssai எந்தெந்த நிறமிகளை (colours) உணவில் பயன்படுத்தலாம் என பட்டியல் கொடுத்திருக்கிறது. அந்த பட்டியலில் உள்ள நிறமிகளைக்கூட 100 கிராமிற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. ஆனா, ரோடமைன் பி என்பது துளி அளவுகூட உணவில் பயன்படுத்தக்கூடாது. இது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இது ஒரு செயற்கை சாயம். இதனை, ஜவுளித்துறையில் பயன்படுத்துவார்கள். ஆனால், இதனை க்ரில்டு சிக்கன், கோபி மஞ்சுரியன், பிரியாணி, சிக்கன் 65 உள்ளிட்ட உணவுகளில் கலருக்காக கலக்கிறார்கள். காரணம், அந்தக் கலர் அந்த உணவின் மீதான கவர்ச்சியை உருவாக்குகிறது. இதை சாப்பிடுவதால் 50 நாட்களிலிருந்து 60 நாட்கள்வரை அந்த நிறமியானது நம் உடலைவிட்டு போகாது. அது நம் கல்லீரல், கிட்னி, மூளை, குடல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கிவிடும். குடலில் காயத்தை உண்டாக்கி நாளைடைவில் புற்றுநோயையே வரவைத்துவிடும். கிட்னி, லிவர் போன்ற உறுப்புகளும் செயலிழந்து போய்விடும். ரத்தத்தில் மூளைக்கு சென்று குறிப்பாக குழந்தைகளின் நினைவாற்றலை குறைத்துவிடும்.

மேலும் குழந்தைகள் வலுவிழந்து காணப்படுவார்கள். அதனால், ரோடமைன் பி நிறமி கலந்த உணவுகளை சாப்பிடவே கூடாது. இதுவரை, சென்னையில் மட்டுமே 450 கடைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சந்தேகப்பட்ட கடைகளில் மட்டும் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு முடிவு வந்தபிறகு அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த உணவுகளில் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் எச்சரிக்கை கொடுத்து 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்போம். மீண்டும் இரண்டாவது முறை அதே கடையில் ஆபத்தான அந்த நிறமி கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்தக் கடையின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்” என்று எச்சரிப்பவர் “கோவா, கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதுகுறித்து ஆய்வு செய்ய எங்களுக்கு மேலிட உத்தரவு வந்துள்ளது. அதனால், நாங்களும் அதிரடி எந்தத் தாமதமும் இல்லாமல் அதிரடி ஆய்வைத் தொடங்கிவிட்டோம். விரைவில் இதுதொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்.