சீனாவில், இறந்த கொசுக்கள் மூலம், 19 நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை போலீஸ் கைதுசெய்திருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
அதாவது, திருட்டு நடந்த வீட்டில், இறந்துகிடந்த கொசுக்களின் ரத்த கறைகளை சோதனைக்கு உட்படுத்தி டி.என்.ஏ மூலம் போலீஸார் திருடனைக் கண்டுபிடித்திருக்கின்றனர். கடந்த ஜூன் 11-ம் தேதி, சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஃபுஜோவில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
திருடன் பல மதிப்புமிக்க பொருள்களை அந்த வீட்டிலிருந்து திருடியிருக்கிறான். சமையலறையில் சில நூடுல்ஸ் மற்றும் முட்டை ஓடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தப் பிறகு, திருடன் அந்த வீட்டிலேயே இரவு தங்கியிருக்கிறான் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். மேலும், அந்த வீட்டில் முக்கிய தடயமாக, பயன்படுத்தப்பட்ட ஒரு கொசுவர்த்திச் சுருள், இரண்டு இறந்த கொசுக்கள் மற்றும் சுவரில் ரத்தக் கறைகளும் இருந்திருக்கின்றன.