
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பே இல்லாத நிலை காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 73 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது.
H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சலும் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று, H3N2 வைரஸ் பாதிப்பு என இரண்டு தொற்றுகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், இரண்டையும் வேறுபடுத்துவது சற்றே கடினமாகிறது.
இதனால் இரண்டு வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க என்ன செய்யலாம் என மருத்துவர்களின் கேட்ட போது, பல்வேறு தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
கொரோனா vs H3N2 வைரஸ்
பட மூலாதாரம், Getty Images
“கொரோனா, H3N2 வைரஸ் தொற்றில் ஏதேனும் ஒன்று ஒருவரை பாதித்தால் காய்ச்சல், சளி, உடல் வலி போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்படும். ஆனால் எந்த தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதை பொதுவான அறிகுறிகளால் உறுதி செய்ய முடியாது. இரண்டுக்குமிடையே சிறு வேறுபாடுகள் இருக்கும், அதை வைத்து முதற்கட்டமாக பகுப்பாய்வு செய்ய முடியும்” என்கிறார் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் பிபிசி தமிழிடம் கூறினார்.
கொரோனா அறிகுறிகள்:
- அதிக காய்ச்சல்
- மூக்கடைப்பு(Nose block)
- கடுமையான உடல் வலி
- அதிக தலை வலி
H3N2 வைரஸ் அறிகுறிகள்:
- காய்ச்சல்
- தொண்டை கரகரப்பு
- மூக்கு ஒழுகுதல்(Running nose)
- கண்ணில் நீர் வழிதல்
இரண்டு வகையான தொற்று ஏற்படும் நபர்களும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சோதனை மேற்கொள்ளலாம்.
பெரும்பாலான நபர்கள் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதால், சில நபர்களுக்கு மட்டுமே நோய்க்கான அறிகுறிகள் ஏற்படும். அப்படி அறிகுறிகள் இருக்கும் நபர்கள் இணை நோயுடன் இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று தேரணி ராஜன் தெரிவித்தார்.
எந்த தொற்று என எப்படி கண்டறிவது?
பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்றாக இருந்தாலும், H3N2 இன்ஃப்ளூயன்சா தொற்றாக இருந்தாலும் உறுதி செய்து கொள்ள சோதனை மேற்கொள்வது கட்டாயம் என தொற்று நோய் நிபுணர் மருத்துவர் ராமசுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“இரண்டில் எந்த தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தான் இருக்கும். அதனால் அறிகுறிகளை வைத்து உறுதி செய்ய முடியாது. ஆனால் கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்புச் சக்தி உருவாகி இருப்பதாலும், கொரோனா பரிசோதனை வெளிநோயாளியாக எடுக்க முடியும் என்பதாலும் தேவைப்பட்டால் முதலில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா சோதனை ‘நெகடிவ்’ என வந்தால், பிறகு ப்ளூ காய்ச்சலுக்கான சோதனை மேற்கொள்ளலாம். ஏனெனில் ப்ளூ காய்ச்சலுக்கான சோதனையை மேற்கொண்டால், முடிவுகள் வரும் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டியது கட்டாயம் என்று மருத்துவர் ராமசுப்பிரமணியன் விளக்கினார்.
மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா?
பட மூலாதாரம், Getty Images
கொரோனா, H3N2 வைரஸ் என இரண்டு தொற்றுகள் தமிழ்நாட்டில் இப்போது அதிகமாக பரவி வருகிறது. இவை இரண்டுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில நாட்களிலேயே இவை சரியாகி விடும், அதனால் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டிய தேவையில்லை என்று பொது மருத்துவர் பூபதி ஜான் பிபிசியிடம் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் இப்போது பரவும் கொரோனாவும், ப்ளூ வைரஸ் தாக்கமும் குறைந்த தாக்கம் கொண்டதாகவே இருக்கிறது. காய்ச்சல்,சளியால் பாதிக்கப்படும் 100 நபர்களில் இருவருக்கு தான் தொற்று ஏற்படுகிறது. அதுவும் 3 முதல் 4 நாட்களில் குணமாகிவிடும் என்பதால், ஓய்வும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் போதுமானது” என்று அவர் தெரிவித்தார்.
ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருக்கும் நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளதால், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், காய்ச்சல் இருந்தால் ஓரிரு நாட்களுக்கு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என மருத்துவர் பூபதி ஜான் கூறினார்.
தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
H3N2 வைரஸ் என்பது H1N1 வைரஸ் தொற்றின் ஒரு வகையே. இந்த வைரஸ் தொற்று ஒரு பருவக் கால தொற்று மட்டுமே. வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே இதன் பாதிப்பு இருக்கும். தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் முதல் இப்போது வரை 600 பேர் H3N2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தினமும் 100 முதல் 150 பேருக்கு H3N2 வைரஸ் பாதிப்புக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு, சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்தில் பரிசோதிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றின் புதிய வகை திரிபு இருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். அதனால் இந்த காய்ச்சல் குறித்து அச்சமடைய தேவையில்லை என்று அவர் விளக்கினார்.
தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இது குறித்து பேசும் போது, ”தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது, பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் H3N2 வைரஸ் தொற்றுடன் கொரோனா தொற்றும் பரவி வரும் நிலையில், சுகாதார கட்டமைப்புகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகளை உறுதிப்படுத்திகொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசு அறிவுறுத்தலுக்கு முன்னதாகவே 2000 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மருத்துவமனைகளில் சேமித்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. போதுமான சாதாரண படுக்கைகளும், ஆக்சிஜன் படுக்கைகளும் உள்ளது.
தமிழ்நாட்டில் H3N2 வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்துள்ளது, தற்போது 15 பேர் மட்டுமே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடமே அதிகமாக கண்டறியப்படுவதாகவும், அவர்களுக்கும் நோயின் பாதிப்பு குறைவாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
H3N2 வைரஸ், கொரோனா என இரண்டு பாதிப்புகளும் பரவி வந்தாலும், தமிழ்நாட்டில் ஊரடங்கு போட வேண்டிய நிலை இன்னும் ஏற்படவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.
H3N2 வைரஸ் அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஐ.சி.எம்.ஆர். ஆய்வுகளின் படி, நோய் எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு குறிப்பாக குழந்தைகள், முதியோர், இணை நோய் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் H3N2 வைரஸ் பாதிப்பு வெளிப்பட வாய்ப்பு உண்டு.
- பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும்.
- 95% Spo2 க்கு குறைந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
- 90% க்கு கீழ் SPO2 சென்றால் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்.
- சுய மருத்துவம் கூடாது. அது ஆபத்தானது. பொன்னான நேரத்தை அதில் வீணாக்கி விடக் கூடாது.
- குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல், இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.
இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், ANI
H3N2 வைரஸ் – எதையெல்லாம் செய்ய வேண்டும்?
H3N2 வைரஸ் பரவாமல் தடுக்க எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்? எதை செய்யலாம்? எதையெல்லாம் செய்யக் கூடாது? என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாதவர்கள் அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுபவர்கள் ஐ.சி.எம்.ஆர். வழங்கியுள்ள கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- முகக்கவசம் அணிவது அவசியம்
- கூட்ட நெரிசலாக இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்
- தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும்
- கண்கள், மூக்கு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்
- தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ளவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
- காய்ச்சல், உடல் வலிக்கு பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்ளலாம்
H3N2 வைரஸ் – எதையெல்லாம் செய்யக் கூடாது?
- கை குலுக்குவதோ, உடல் ரீதியான வேறு வகை வாழ்த்துப் பரிமாற்றமோ கூடாது
- பொது இடங்களில் எச்சில் உமிழக் கூடாது
- மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக்கோ அல்லது வேறு மருந்துகளையோ எடுக்கக் கூடாது
- மற்றவர்களுடன் ஒன்றாக நெருக்கமாக அமர்ந்து உண்ணக் கூடாது
மழை மற்றும் குளிர்காலத்தின் போது பெரும்பான்மையோருக்கு வந்து செல்லும் சாதாரண காய்ச்சல் தொற்று இது. எனினும், குழந்தைகள், முதியோர் மற்றும் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
‘தினமும் 5 முறை செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதவில்லை’
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: