ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்று வந்த கடந்த ஆட்சியில் கணவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் விவாகரத்து பெற்றனர். 2021-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபன்கள், கடந்த ஆட்சியில்பெற்ற விவாகரத்து எதுவும் செல்லாது என அறிவித்ததுடன் பெண்களை மீண்டும் தங்கள் முன்னாள் கணவர்களுடனே சேர்ந்து வாழும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் பல பெண்கள் தலைமறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கணவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்தாலோ அல்லது போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தாலோ மட்டுமே விவாகரத்து பெறும் உரிமை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தன் கணவனால் பாதிக்கப்பட்ட மர்வா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தனக்கு நடந்த கொடுமைகளை AFP ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார். “தாலிபன்கள் மீண்டும் என்னை, விவாகரத்து பெற்ற என் கணவனுடன் சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தியபோது நானும் என் மகள்களும் மிகவும் அழுதோம்.
தினமும் கணவர் என்னை அடித்துக் கொடுமைப்படுத்துவார். இது பல மாதங்களாக நீடித்தது. நான் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டேன். கணவனால் என் கை விரல்கள் உடைக்கப்பட்டன. நான் மயக்கத்தில் இருந்த பலநாள்களில் என் மகள்கள் தான் உணவளிப்பார்கள்.

கணவர் என் தலைமுடியை மிகவும் பலமாகப் பிடித்து இழுப்பார், இதனால் எனக்கு ஓரளவு வழுக்கையும் ஏற்பட்டது. அவர் என்னைத் தொடர்ந்து அடித்ததால் என் அனைத்துப் பற்களும் உடைந்துவிட்டன. இறுதியில் எனக்கு நானே தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு என் ஆறு மகள்கள் மற்றும் 2 மகன்களுடன் தப்பி ஓடி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள என் உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
என் குழந்தைகள், அம்மா நாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை… குறைந்தபட்சம் துஷ்பிரயோகத்திலிருந்து விடுபட்டுவிட்டோம் என்று கூறுகிறார்கள். இங்கு பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக்கூட எங்களைத் தெரியாது, ஆனால் இந்த இடத்தை என் கணவர் கண்டுபிடித்துவிடுவாரோ என பயமாக உள்ளது” என மர்வா கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில், 90 சதவிகிதம் பெண்கள் தங்கள் கணவர்களால் அடித்துக் கொடுமைப்படுத்தப்படுவதாக ஐ.நா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாலிபன் அரசாங்கம் இஸ்லாத்தின் கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறது, இதனால் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு காலத்தில் அங்கு பெண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமைப்புகள், தங்குமிடங்கள், சேவை மையங்கள் ஆகியவை கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் பெண்கள் விவகார அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் போன்றவையும்அழிக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்காக எந்தப் பெண்ணாவது நீதிமன்றத்துக்குச் சென்றாலும் அங்கும் ஆணாதிக்கம் நிறைந்து தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும் பல பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.