சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்திபவனில் நேற்று கொண்டாடப்பட்டது. வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், முருகானந்தம், செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
சோனியா காந்திக்கு, அமலாக்கத்துறையில் ஆஜராக சம்மன் அனுப்பியதை கண்டித்து வரும் 21ம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அக்டோபர் 2ம்தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.