கேள்விக் கணைகளுக்கு ஈட்டியால் பதில் அளித்த நீரஜ் சோப்ரா: 90.3 மீட்டர் தூரம் எறிந்து சாதனை! | Neeraj Chopra Record at Doha Diamond League 2025

Share

புகழ்பெற்ற டைமண்ட் லீக்கின் ஒரு கட்ட தொடர் தோஹாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரமான நீரஜ் சோப்ரா 90.3 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவரது சொந்த மற்றும் தேசிய சாதனை 89.94 மீட்டராக இருந்தது.

நீரஜ் சோப்ரா தனது 3-வது முயற்சியில் 90 மீட்டரை கடந்து வீசினார். 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற சாதனையையும், உலக அரங்கில் 25-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 27 வயதான நீரஜ் சோப்ரா. ஆசிய வீரர்களில் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.27 மீட்டரும், சீன தைபேவின் ஷாவோ சன் செங் 91.36 மீட்டரும் எறிந்துள்ளனர்.

தோஹா போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இறுதி மற்றும் 6-வது முயற்சியில் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ஜூலியன் வெபர் தனது கடைசி முயற்சியில் ஈட்டியை செலுத்தும் வரை நீரஜ் சோப்ராதான் முன்னிலையில் இருந்தார். ஜூலியன் வெபரும் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிவது இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் இந்த சீசனில் அவர், முன்னிலை வகிக்கிறார்.

இரு முறை உலக சாம்பியனும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.65 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார்.

90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்தது குறித்து நீரஜ் சோப்ரா கூறும்போது, “90 மீட்டரை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அது ஒரு கசப்பான-இனிமையான அனுபவம். என்னுடைய பயிற்சியாளர் ஜான் ஜெலெஸ்னி இது 90 மீட்டர் எறியக்கூடிய நாள் என்று கூறினார். காற்று மற்றும் வானிலை உதவியாக இருந்தது. வரவிருக்கும் போட்டிகளில் இதை விட அதிகமாக என்னால் வீச முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் சில அம்சங்களில் பணியாற்றுவோம், மேலும் இந்த சீசனில் மீண்டும் 90 மீட்டருக்கும் அதிகமாக வீசு முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் எட்டியை எறிவதற்கு கடும் முயற்சி எடுத்து வந்தார். பலமுறை அவரிடம் இதுதொடர்பாக கேள்விக்கணைகளும் தொடுக்கப்பட்டது. இதற்கு தற்போது தனது ஈட்டியால் பதில் அளித்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com