பட மூலாதாரம், IMRAN QURESHI
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்துப் பேசிய அந்த நடிகை, தனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்று கூறினார்.
2017-ஆம் ஆண்டு ஒரு நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கேரள செஷன்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 12 அன்று தீர்ப்பு அளித்தது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து அந்த நடிகை ஞாயிற்றுக்கிழமை அன்று பேசியுள்ளார்.
நீதிமன்றம் தனது ‘அடிப்படை உரிமைகளைப்’ பாதுகாக்கவில்லை என்று அவர் கூறினார்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட பதிவில், “இந்த விசாரணை நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கை இழந்ததற்கான காரணங்கள் இவைதான்” என்று தலைப்பிட்டிருந்தார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை, குற்றச் சதி, கடத்தல், சட்டவிரோதக் காவலில் வைத்தல், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல், நம்பிக்கைத் துரோகம் மற்றும் ஆபாசப் படங்களைப் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு பேருக்கு அமர்வு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இருப்பினும், நடிகை மீதான தாக்குதலுக்கு நடிகர் திலீப்தான் மூளையாகச் செயல்பட்டார் என்பதை நிரூபிப்பதில் அரசுத் தரப்புத் தவறிவிட்டதாகக் கூறி, நீதிமன்றம் அவரை விடுவித்தது.
அந்த நடிகை தனது பதிவில், “எனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரமான மெமரி கார்டு, நீதிமன்றக் காவலில் இருந்தபோதே மூன்று முறை சட்டவிரோதமாக அணுகப்பட்டது” என்று கூறினார்.
“மெமரி கார்டு சேதப்படுத்தப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கோரினேன். ஆனால், பலமுறை கேட்டும் அந்த விசாரணை அறிக்கை எனக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.
அந்த நடிகை மேலும், “இந்தத் தீர்ப்பு பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் எனக்கு ஆச்சரியமில்லை. 2020-ஆம் ஆண்டிலிருந்தே ஏதோ சரியில்லை என்று நான் உணரத் தொடங்கினேன். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட குற்றவாளி விஷயத்தில், வழக்கு கையாளப்பட்ட விதத்தில் மாற்றம் இருப்பதை அரசுத் தரப்பும் கவனித்தது” என்று கூறினார்.
“நீதிமன்றச் சூழல் அரசுத் தரப்புக்கு உகந்ததாக இல்லை என்று கூறி, இரண்டு அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்டனர். நீதிமன்றத்தின் அணுகுமுறை ஒருதலைபட்சமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்ததால், இந்த நீதிமன்றத்திடம் இருந்து நீதி எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினர்” என்று அவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டதில் அந்த நடிகை “நன்றியை” வெளிப்படுத்தினாலும், “நான் ஒரு நியாயமான விசாரணைக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, அதே நீதிபதியே வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரி குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர்” என்று கூறினார்.
“இது என் மனதில் இன்னும் தீவிரமான சந்தேகங்களை எழுப்பியது. எனது கவலைகளைத் தெரிவித்து நான் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்குக் கூட கடிதம் எழுதினேன்.”
“பல வருட வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களுக்குப் பிறகு, நான் ஒரு கடுமையான உண்மையை அறிந்துகொண்டேன்: ‘இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை'” என்று அவர் கூறினார்.
இந்த நீண்ட பயணத்தில் தனக்குத் துணையாக நின்ற ஒவ்வொருவருக்கும் மனதார நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் தனது பதிவில், “நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்குத் துணை நின்றவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், இது திகிலூட்டுகிறது. இந்தக் குற்றத்திற்குப் பின்னால் உள்ள அனைவரும் பொறுப்பேற்கும்போதுதான் நீதி முழுமையடையும்” என்று கூறியுள்ளார்.