கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் இன்று ராஜ்பவனில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை வழியனுப்புவதற்காக கேரள மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் ராஜ்பவனுக்கு சென்றிருந்தனர். முதல்வர் பினராயி விஜயனோ, அமைச்சர்களோ கவர்னரை வழியனுப்ப ராஜ்பவனுக்குச் செல்லவில்லை.
கேரள கவர்னராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்த ஆரிப் முஹம்மதுகான் சி.பி.எம் ஆட்சிக்கு கடும் குடைச்சர் கொடுத்துவந்தார். சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் சாலையில் வைத்து கறுப்பு கொடி காட்டியபோது, காரில் இருந்து இறங்கிச் சென்று “கிரிமினல்ஸ்’ என அழைத்து பரபரப்பை கிளப்பினார். அரசுக்கு எதிராக சாலையோர டீக்கடையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

தான் எங்கு செல்கிறேன் என உளவுத்துறைமூலம் அறிந்து அந்த தகவலை எஸ்.எஃப்.ஐ அமைப்பினரிடம் முதல்வர் பினராயி விஜயன் கூறுவதாகவும். அதனால் அவர்கள் தான் போகும் இடம் எல்லாம் போராட்டம் நடத்துகின்றனர் எனவும் முதல்வர் பினராயி விஜயன் மீது கவர்னர் குற்றம் சாட்டினார். பிரஸ் மீட் நடத்தி அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கவர்னராக ஆரிப் முஹம்மதுகான் செயல்பாடுகள் இருந்தன. இதை மனதில் வைத்தே கேரள முதல்வரோ, அமைச்சர்களோ கவர்னரை வழியனுப்பும் நிகழ்வுக்கு செல்லவில்லை என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.