ஆரஞ்சு கோல்டு என்று அழைக்கப்படும் கேரட் ஊட்டியின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கிலீஷ் வெஜிடபிள் மற்றும் சைனீஸ் வெஜிடபிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நீலகிரியில் ஊட்டி மட்டுமல்லாது குளிர்ந்த காலநிலை கொண்ட குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகளவில் கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறையின் புள்ளிவிவரப்படி நீலகிரியில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் கேரட் பயிரிடுவதாக கூறுகின்றனர்.

பெரும்பாலும் வீரிய ரக விதைகளை மட்டுமே பயன்படுத்துவதால் கேரட் சாகுபடி அதிக முதலீடு நிறைந்த பயிராக மாறி வருகிறது. கேரட் சாகுபடியில் விவசாயிகளுக்கான செலவீனங்களை இயந்திர பயன்பாடுகளை தோட்டக்கலைத்துறையினர் ஊக்கப்படுத்தி வருகின்றனர். கேரட் விதைப்புக்கு இயந்திரங்களை பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு 94 ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம் என பட்டியலிட்டுள்ளனர்.
கேரட் விதைப்பு இயந்திரத்தின் பயன்கள் குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ” வீரிய ரக கேரட் விதைகள் ஒரு கிலோ ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆள்களை கொண்டு விதைப்பதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 2 கிலோ முதல் 2.5 கிலோ வரை கேரட் விதைகள் உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், கேரட் விதைப்பு இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகளே போதுமானதாக இருக்கிறது. இதனால் விதைகளுக்கான செலவில் ரூ.30 ஆயிரம் வரை சேமிக்கலாம்.

இயந்திரங்கள் மூலம் விதைப்பதற்கான மேட்டுபாத்தி அமைத்தல் மற்றும் விதைப்புச் செலவு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் மட்டும் போதுமானதாக உள்ளது. அதேவேளையில் சாதாரண முறையில் விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.14 ஆயிரம் வரை செலவு மிச்சப்படுத்தப்படுகிறது.
இயந்திரத்தை பயன்படுத்தி விதைப்பதன் மூலம் கேரட் விதைகள் சரியான இடைவெளியில் விதைப்பு மேற்கொள்ளப்படுவதால் சாதாரண முறையில் அதிகப்படியான கேரட் பயிர்களை களைக்க தேவைப்படும் கூலிச் செலவு ரூ.20 ஆயிரம் வரை மீதமாகிறது. இயந்திர விதைப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் கேரட் 90 சதவீதம் ராசி (பெரிய அளவிலான) கேரட் விளைச்சல் கிடைப்பதால் கூடுதல் வருமானமாக ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கும். இதன்மூலம் சாதாரண முறையில் கேரட் விதைப்பதை காட்டிலும், கேரட் விதைப்பு இயந்திரம் மூலம் விதைப்பு மேற்கொள்வதால் மொத்தமாக ஒரு ஏக்கருக்கு ரூ.94 ஆயிரம் வரை மிச்சப்படுத்தலாம்.

இந்த எளிய தொழில்நுட்பத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேரட் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் விதைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தி செலவினை குறைக்கலாம்.
விவசாயிகள் தொடர்ந்து வீரிய ஒட்டு ரகங்களையே பயன்படுத்தாமல், உள்ளூர் ரகங்கள் குறைந்த விலையில் விற்கப்படும் மாற்று வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்து உற்பத்தி செலவினை குறைக்கலாம் ” என்றனர்.