மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. அவரது முடிவு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார் மகேந்திர சிங் தோனி.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை மனதார ஏற்றுக் கொண்டு கேப்டன் பொறுப்பை கவனித்தார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் அவர் அணியை வழிநடத்தி இருந்தார். இந்நிலையில் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார் ஜடேஜா. மேலும் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி வசம் ஒப்படைத்தார்.
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை அணியை வழிநடத்தினார் தோனி. 13 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் ஜடேஜாவின் விலகல் முடிவு குறித்து பேசியிருந்தார் தோனி.
“கடந்த சீசனின் போதே நடப்பு சீசனில் அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்படும் என்பதை ஜடேஜா அறிந்திருந்தார். அதற்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள போதுமான நேரம் இருந்தது. இதில் முக்கியமானது என்னவென்றால் அணியை அவர் நடத்த வேண்டும். எனக்கும் அந்த மாற்றம் தேவைப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு கொஞ்சம் ஆலோசனைகள் கொடுத்தேன். அதன்பிறகு அனைத்து முடிவுகளையும் அவரே எடுத்தார்.
சீசன் முடியும் போது அணியின் கேப்டன் தான் அல்ல என்ற எண்ணம் அவருக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் அதனை நிறுத்திக் கொண்டேன். ஒரு கேப்டனை ஊட்டி வளர்க்க முடியாது. களத்தில் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு அந்த கேப்டன் தான் பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார் தோனி.