கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை; ஆனால், அத்தகைய கறிவேப்பிலையை நாம் உண்ணாமல் ஒதுக்கி வைப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், நீர்மோர் சகலத்திலும் கறிவேப்பிலை இடம் பெற்றிருந்தாலும் உணவு உண்ணும் போது ஒதுக்கி வைக்கும் அளவுக்கு கறிவேப்பிலை என்றாலே பலருக்கும் கசக்கிறது.
`உணவே மருந்து’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறிவேப்பிலை. அதனால்தான் நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தினார்கள். `இது மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது என்பதே மருத்துவர்களின் வாதம். மணம் நிறைந்த, மகத்துவம் மிகுந்த கறிவேப்பிலையில் உள்ள சத்துகளையும், மருத்துவக் குணங்களையும் பார்க்கலாம்.
அட, இவ்வளவு சத்துகளா…
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன. மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. கொழுப்புச்சத்து 100 கிராமுக்கே 0.1 கிராம் என்ற அளவில்தான் உள்ளது.