அவனியாபுரம்: கூட்டணி குறித்து கேள்விக்கு பாஜ மேலிடம் பார்த்து கொள்வார்கள் என்று கூறி அண்ணாமலை கப்சிப் என அடங்கினார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், மதுரை விமான நிலையத்தில் நேற்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜ தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரை டெல்லியில் சந்தித்தேன். கடந்த ஒரு மாதத்தில் 2, 3 முறை கர்நாடக தேர்தல் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்துள்ளேன். தமிழகத்தின் அரசியல் களம் பல்வேறு விதமாக உள்ளது. அதில் பா.ஜனதாவின் வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது? தமிழகத்தின் நிலை என்ன? போன்ற விபரங்கள் தொடர்பாக பேசுவதற்காக அவர்களை சந்தித்தேன்.
கூட்டணியை பொருத்தவரை எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. பாஜ மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழு அதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழுவே கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும். பாஜ கட்சிக்கோ, எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியின் மீதும், எந்த ஒரு தலைவரின் மீது கோபமோ, ஆதங்கமோ எதுவும் இல்லை. எல்லா கட்சியினரும் அவரவர் கட்சி வளர்ச்சி வளர வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஒரு கூட்டணியில் இருந்தாலும் அது தான் தர்மம்.இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் விடுத்த அண்ணாமலை மேலிடம் கொடுத்த டோசால், தற்போது பாஜ மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழு முடிவு செய்யும் என கூறிவிட்டு கப்சிப் என அடங்கிவிட்டார்.
* பாஜவின் பெரிய பிராண்ட் அம்பாசிடரே ராகுல்தான்
தூத்துக்குடியில் அண்ணாமலை அளித்த பேட்டி: சூரத் கோர்ட்டில் நடந்து வந்த அவமதிப்பு வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் மக்களவை சபாநாயகர், ராகுல்காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல்காந்திக்கும் அது பொருந்தும். ராகுல்காந்தி தேர்தலில் போட்டியிட வேண்டும். பாஜவின் பெரிய பிராண்ட் அம்பாசிடரே அவர்தான்’ என்று தெரிவித்தார்.
* கூண்டுக்கிளியாக இருந்தது போதும்
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘பாஜவினர் இதுவரை கூண்டுக்கிளியாக இருந்தது போதும், உங்களால் பறக்க முடியும். எனவே கூண்டை உடைத்துக் கொண்டு பறக்க தயாராகுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுவோம். வரும் 2024 தேர்தலில் வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று தெரிவித்தார்.