பாலாடையில் பால் கொடுக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:
குழந்தையை தாயின் மடியில், தலை உடலைவிட மேலே இருக்கும் வண்ணம் கிடத்த வேண்டும்.
வாயிலிருந்து வெளிப்படும் பாலை துடைப்பதற்கு, குழந்தையின் கழுத்தின் மேல் நாப்கின் அல்லது பர்ப் துணியை (Burp cloth) வைத்திட வேண்டும்.
பாலாடையில் விளிம்பிற்கு அருகாமை வரை, பாலை நிரப்பிக் கொள்ள வேண்டும். பாலாடையை, உங்கள் விரல்களைக் கொண்டு, பக்கவாட்டில் பிடித்திடுங்கள் (இவ்வாறு, பிடிக்கும்போது, விரல்கள் பாலில் படுவதைத் தவிர்த்திட முடியும்).
பாலாடையின் முனையை, குழந்தையின் வாயின் ஓரத்தில், உதடுகள் மத்தியில் வைத்து, சீராக பாலை கொடுக்கத் தொடங்குங்கள்.
பாலை, மிக மெதுவாக கொடுக்க வேண்டும்; குழந்தை, பாலை முழுங்குவதை உறுதி செய்திடுங்கள்.
பாலாடையிலுள்ள பாலை முழுமையாக கொடுத்த பின்பு, இரண்டாவது முறை பாலாடையில் பாலை நிரப்பி, மேற்கூறியவாறு, மீண்டும் மெதுவாக பாலாடையில் கொடுக்கத் தொடங்குங்கள்.
குழந்தையின் எடைக்கு ஏற்றவாறு, ஒவ்வொரு முறையும் எத்தனை முறை பாலாடையில் பால் கொடுக்க வேண்டுமென கணக்கிட்டீர்களோ, அத்தனை முறை பாலாடையில் பால் நிரப்பி, மிக மெதுவாக பால் கொடுத்திடுங்கள்.
குழந்தை பாலை சரியாக முழுங்கவில்லையென்றால், மெல்லிய தீண்டல் மூலம் குழந்தையை எழுப்பி, பிறகு பாலாடையில் பால் கொடுக்கத் தொடங்கிடுங்கள்.
பால் முழுமையாகக் கொடுத்து முடித்த பிறகு, குழந்தையை தோளின் மீது கிடத்தி, ஏப்பம் வரும் வரை முதுகில் தட்டிக் கொடுங்கள்.
பால் கொடுத்த பிறகு, பாலாடையை சோப்பு நீரில் சுத்தம் செய்திடுங்கள். அடுத்த முறை பவுடர் பால் கலக்குவதற்கு முன்பு, பாலாடை, பவுடர் பால் கலக்க உபயோகப்படுத்தப்படும் கிண்ணம், கரண்டி, சிரிஞ்ச் போன்றவற்றை தனியாக, கொதிக்கும் நீரில் 20 நிமிடங்கள் போட்டு எடுங்கள்; அல்லது ஸ்டெரிலைஸரில் போட்டு எடுங்கள். இதன் மூலம், பாலாடை மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுத்திட முடியும்.
அடுத்த அத்தியாயத்தில், புட்டிப்பால் ஏன் கொடுக்கக்கூடாது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
பராமரிப்போம்…