குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில், குறைப்பிரசவ குழந்தைகளின் 91% இறப்புகள், காற்று மாசுபாட்டின் காரணமாக நிகழ்வதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இது தொடர்பாக, தனியார் அமைப்புடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) ஆகியன, ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. இதில், பிரசவம், குறைப்பிரசவம் மற்றும் கர்ப்பகாலத்தில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில், `Born Too Soon: Decade of Action on Preterm Birth’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், குறைப்பிரசவ குழந்தைகளின் 91% இறப்புகள், காற்று மாசுபாட்டின் காரணமாக நிகழ்வதாகவும், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ மற்றும் காற்று மாசு ஆகியவை கர்ப்பத்தை பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 60 லட்சம் குறைப்பிரசவங்கள் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா உள்ள தாய்மார்களுக்கு ஏற்படும் அபாயத்தை 52 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதிக வெப்ப வெளிப்பாடு, 16 சதவிகிதம் ஆபத்தை அதிகரிக்கிறது மற்றும் வறட்சி போன்ற தீவிர வானிலை காரணிகளால் குறைப்பிரசவ ஆபத்து நேரடியாக அதிகரிக்கிறது.

உணவு பாதுகாப்பின்மை, இடம் பெயர்வு, தண்ணீர் அல்லது உணவு மூலம் பரவும் நோய்கள், எலும்பு நோய்கள், சுகாதார கட்டமைப்பில் உள்ள பின்னடைவு போன்றவையும், கர்ப்பத்தில் தாக்கத்தை உண்டாக்குகின்றன.
இத்தகைய அபாயங்களை வெளிப்படையாகக் குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கும், காலநிலை மாற்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளுக்கு அதிகநிதி தேவைப்படுவதாக, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.