அமிர்தசரஸ்-கொல்கத்தா சென்ற ரயிலில் பெண் பயணி ஒருவர் தலையின்மீது, டிக்கெட் பரிசோதகர் ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகப் புகார் எழுந்த நிலையில், இன்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
பீகாரைச் சேர்ந்தவராக அறியப்படும் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை, இது தொடர்பான புகாரின் அடிப்படையில் நேற்று (13-3-23) லக்னோவில் வைத்து போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். புகாரளித்த பெண், தன்னுடைய கணவர் ராஜேஷ் குமாருடன், அகல் தக்த் எக்ஸ்பிரஸின் ஏ1 பெட்டியில் பயணம் செய்ததாக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு, சம்பவத்தன்று முன்னா குமார் விடுமுறையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அப்போதுதான், முன்னா குமார் மதுபோதையில் அந்தப் பெண் பயணிமீது சிறுநீர் கழித்திருக்கிறார்.