''கிட்டத்தட்ட ஆணுறுப்பே இல்லை அவருக்கு…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 135

Share

ஓர் இளைஞர், ‘நான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை’ என்றாலோ, ‘இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை’ என்றாலோ, அவருடைய வார்த்தைகளுக்குப் பெற்றோரும், உறவினர்களும் கட்டாயம் செவிகொடுக்க வேண்டும் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதற்கான காரணத்தை ஒரு கேஸ் ஹிஸ்டரி மூலம் விளக்குகிறார்.

Sexologist Kamaraj

”அந்த இளைஞருக்கு 25 வயது. என்னைச் சந்திக்க வந்திருந்தார். ‘வீட்டில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால், என்னுடைய சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது டாக்டர்’ என்றார் வருத்தமாக. அவருக்குக் கிட்டத்தட்ட ஆணுறுப்பே இல்லை. சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் மெல்லிய கயிறுபோல இருந்தது. தவிர, விந்துப்பையும் இல்லை. அவருக்கு ஹார்மோன் பரிசோதனைகள் எடுத்துப் பார்த்தேன். நான் நினைத்ததுபோலவே ஹார்மோன் அளவுகள் மிக மிகக் குறைவாக இருந்தன. என்னுடைய மருத்துவ அனுபவத்தில், அந்த இளைஞருடைய பிரச்னையை சரி செய்ய முடியும். ஆனால், அதற்கு சில வருடங்கள் ஆகும். அதை அவரிடம் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

முதலில் ஹார்மோன் சிகிச்சை கொடுத்தேன். லேசாக தாடி, மீசை வளர ஆரம்பித்தது. அதன்பிறகு, Follicle-stimulating hormone (FSH) கொடுத்தேன். விந்துப்பைகளே இல்லாதிருந்த இடத்தில், லேசான புடைப்புபோல தெரிய ஆரம்பித்தது. ஹார்மோன் சிகிச்சைகள் அவருடைய உடம்பில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன என்பது தெரிந்ததும், இரண்டு அல்லது மூன்று வருடங்களில் உங்களால் எல்லா ஆண்களையும்போல வாழ முடியும் என்று கூறினேன். அவரும் மகிழ்ச்சியுடன் சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்.

Sex Education

அந்த நேரத்தில் அவருடைய வீட்டில் ஒரு பிரச்னை வந்தது. அவருடைய தம்பிக்கு உடனே திருமணம் செய்துவைக்க வேண்டிய சூழல். அதனால், அண்ணனாகிய இவருக்கு உடனே திருமணம் செய்தாக வேண்டுமெனக் கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இளைஞர் என்னிடம் ஆலோசனை கேட்டார்.

‘தம்பி முதலில் திருமணம் செய்து கொள்ளட்டும்’ என்று சொல்லிவிடுங்கள் என்றேன். அவரும் அப்படியே செய்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முடிவடையும் தறுவாயில், அந்த இளைஞருக்கு தாடி, மீசை, ஆணுறுப்பெல்லாம் நன்கு வளர்ந்துவிட்டன. மெல்லிய கயிறுபோல இருந்த ஆணுறுப்பு அதற்கான வளர்ச்சியுடன் மாறியது. அதன்பிறகு, அவர் திருமணம் செய்துகொண்டார். இயல்பான தாம்பத்ய உறவு, குழந்தைப் பேறு என அவர் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்.

couple

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பிரச்னையை எந்த வயதிலும் சரி செய்ய முடியும் என்பதுதான். ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது, விதைப்பையே இல்லை என்றெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இன்றைக்கு இல்லை” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com