டிஃபெண்டிங் சாம்பியனான இந்தியாவிற்கு இம்முறை இறுதிப் போட்டியில்கூட இடமில்லை. எதிர்மறை விமர்சனங்கள் மட்டுமே சூப்பர் 4 சுற்றில் அவர்கள் முன்பாக வீசி எறியப்பட்டன. ஆனால், அவற்றிற்கான பதிலைத் தேடும் பணி எல்லாம் ஓரிரு நாள்கள் காத்திருக்கலாம், சற்று தாமதமாக அதன்மீது கவனம் செலுத்திக் கொள்ளலாம் எனுமளவு அதை மறக்கடிக்கும்படி கோலியின் 71-வது சதம் வந்து சேர்ந்து ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் இருந்த இடத்தில் அவருக்கு அடுத்த தலைமுறை வீரராகக் கொண்டாடப்பட்டவர்தான் கோலி. எந்த எதிரணி பௌலர்களுக்கும் சவால் விடுக்கும் அவரது பேட்டுக்குச் சதங்கள் சாதாரணமானவை. அவரது திறன் எனும் நூலில்தான் பல இந்திய வெற்றிகள் கட்டமைக்கப்பட்டன.
ஆனால், 2019 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அவரது கரியரின் மீது அடர்ந்த இருள் படிந்திருந்தது. கிரகணம், சூரியனையே விழுங்கி விட்டது போன்ற காலகட்டம் அது. மனம் சற்றே வலுவிழந்திருக்கும் சமயம், சின்ன அடிகள் கூட பெரிய வலியைத் தரும். அது நமது வளர்ச்சிப் பாதையில் நம்மைப் பின்னோக்கிப் பயணிக்க வைக்கும். கோலி கடந்ததும் இப்படிப்பட்ட காயங்களைத்தான்.
ஃபார்ம் இழந்து தவித்ததிலிருந்து, கேப்டன் பதவி பறிப்பு வரை எல்லா இடர்பாடுகளையும் கோலி பார்த்துவிட்டார். ஆடிய களத்தில் எல்லாம் தோல்வியும் சொற்ப ரன்களுமே அவரை நலம் விசாரித்தன. வின்டேஜ் கோலி ஒருசில போட்டிகளில் தலை காட்டினாலும், அவர் ஒரு கவர் டிரைவோடோ, கண்களில் தெரியும் சின்ன ஒளியோடோ மங்கிப் போயிருந்தார்.