சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டுமென்ற `காலிஸ்தான்` கோரிக்கையை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வரும் அம்ரித்பால் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் பஞ்சாப் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அம்ரித்பால் சிங்.
அந்த காணொளியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அகல் தக்த்தின் ஜதேதருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து அவர் பேசியுள்ளார். இது சமீபத்தில் எடுக்கப்பட்ட காணொளிதான் என்பதை உறுதி செய்கிறது.
” தற்போது நடந்துவரும் பிரச்னைகள் தொடர்பாக ஆலோசிப்பதற்கு, வரும் ஏப்ரல்13ஆம் தேதி, சர்பத் கல்சாவிற்கு (சீக்கியர்களின் மாநாடு) ஏற்பாடு செய்யுமாறு அகல் தக்த்தின் ஜதேதரிடம், நான் கூறியிருக்கிறேன்” என்று அம்ரித்பால் சிங் அந்த காணொளியில் கூறுகிறார்.
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் கூட சீக்கியர்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்னைகள் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு சர்பத் கல்சா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே தற்போது அம்ரித்பால் சிங்கின் இந்த அழைப்பிற்கு ஜதேதர் பதிலளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த மாதம் பிப்ரவரி23 ஆம் தேதி, அமிர்தசரஸ் பகுதியில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தில் ஏற்படுத்திய கலவரத்திற்காக அம்ரித்பால் சிங் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளியில் அம்ரித்பால் சிங் கூறியிருப்பது என்ன?
அம்ரித்பால் சிங் வெளியிட்டிருக்கும் காணொளி எடுக்கப்பட்டிருக்கும் நேரம் மற்றும் தேதி குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் அதேசமயம் மார்ச் 27ஆம் தேதி அன்றுதான் `அகல் தக்த்தின்` ஜதேதர், ஹர்பிரீத் சிங்கிடம் மாநாட்டுக்காக தான் அழைப்புவிடுத்ததாக குறிப்பிடுகிறார் அம்ரித்பால் சிங்.
அதேபோல் மார்ச் 18 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு குறித்து பேசும் அம்ரித்பால் சிங், ”இந்த அரசு என்னை வீட்டில் வந்து கைது செய்ய முயன்றிருந்தால், நான் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பேன். ஆனால் ஒரு பெரும் படையுடன் அவர்கள் என்னை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றார்கள். ஆனால் எல்லாம் வல்ல இறைவன் என்னை காப்பாற்றிவிட்டார்” என்று குறிப்பிடுகிறார்.
“ அவர்கள் எங்களை மால்வாவிற்கு செல்லவிடாமல் தடுத்து, கல்சா விகாரை (ஊர்வலம்) மேற்கொள்ளவிடாமல் செய்வதற்கு முயற்சிக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன். ஆனால் நாங்கள் எப்படியாவது மால்வாவிற்கு செல்ல வேண்டும். பின் ஏதேனும் ஒருவழியில் முயற்சி செய்து கல்சா விகாரை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கிறார் அம்ரித்பால்.
பஞ்சாப்பின் பல்வேறு இடங்களில் கல்சா விகாரை நடத்துவதற்கு அம்ரித்பால் சிங் திட்டமிட்டிருந்தார்.மார்ச்19ஆம் தேதி மால்வா பகுதியில் இரண்டாம் கட்ட கல்சா விகார் நடைபெறவிருந்தது.
”இணையதளம் முடக்கம் காரணமாக, எங்களால் எதையும் தொடர்புகொள்ள முடியவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்கு முதலில் தெரியவில்லை. அதன்பின் சில செய்திகளை படித்து, என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்” என்று அம்ரித்பால் சிங் அந்த காணொளியில் கூறுகிறார்.
சர்பத் கல்சா குறித்து அவர் கூறும்போது, ” இந்த விஷயத்தில் ஜதேதர் சாஹிப் வலிமையான முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
பஞ்சாப் மற்றும் சீக்கியர்களின் நலனுக்காக அவர் இதை செய்ய வேண்டுமென அம்ரித்பால் கூறுகிறார்.
அம்ரித்பாலின் காணொளிக்கு காவல்துறையினர் என்ன சொல்கின்றனர்?
பஞ்சாப் மாநில டி.ஐ.ஜி., நரேந்திர பார்கவாவை பிபிசி செய்தியாளர் அரவிந்த் சாப்ரா தொடர்பு கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த காணொளியின் உண்மைதன்மை குறித்து உறுதியாக கூறமுடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “இந்த காணொளி உண்மையாகவே அமிர்த் பாலால் எடுக்கப்பட்டு, பகிரப்பட்டிருந்தால் அதன் மூலம் ஒன்றே ஒன்று மட்டும்தான் தெளிவாகிறது. அதாவது அவர் பஞ்சாப் காவல்துறையினரின் கட்டுபாட்டில் இல்லை” என்று தெரிவித்தார்.
”பஞ்சாப் மாநில காவல்துறையினர் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். தற்போது அவர் காணொளி வெளியிட்டிருப்பதன் மூலம் அவர் ஊடகங்களிடம் சரண் அடைந்துவிட்டார் என்பதையே காட்டுகிறது” எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கு முன்னதாக பிபிசியிடம் பேசிய அமிர்தசரஸின் காவல் ஆணையாளர் நௌஹினால் சிங், ”தர்பார் சாஹிப்பிற்கு யார் வந்து சரணடைந்தாலும், அவர்கள் மேல் சட்டத்தின்படி முறையான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும் என்பது குறித்து நான் உறுதியளிக்கிறேன். சரண் அடையும் நபர் எந்தவொரு விதத்திலும் ஒடுக்குமுறைகளை சந்திக்க மாட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
யார் இந்த அம்ரித்பால் சிங்?
அம்ரித் பால் சிங் ’வாரிஸ் பாஞ்சாப் டி’ என்ற சீக்கிய இயக்கத்திற்கு தலைவராக இருக்கிறார். சீக்கியர்களுக்கு என தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை அவர்கள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர்.
துபாயில் சில காலம் வசித்து வந்த அம்ரித்பால் சிங், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு திரும்பினார். அம்ரித் சஞ்சார் என்ற பெயரில் போதைப் பொருட்கள் ஒழிப்பு இயக்கம் ஒன்றை துவங்கி, இளைஞர்களை ஒன்றுதிரட்டி செயல்பட்டு வருகிறார்.
ஆனால் அதன்பின் அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சுகளால் சமூகத்தில் கவனம் பெறத் துவங்கினார். இறுதியாக பஞ்சாபின் அஜ்னலா காவல்நிலையத்தில் நடந்த கலவரம் காரணமாக தேசியளவில் பேசுபொருள் ஆனார் அம்ரித்பால் சிங்.
கடந்த மார்18ஆம் தேதியிலிருந்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரும் அளவிலான எண்ணிக்கையில் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.