டேன்ஜர்: கால்பந்து விளையாட்டு உலகின் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ. நட்பு ரீதியிலான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மொராக்கோ விளையாடியது. இந்நிலையில், பிரேசில் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.
மொராக்கோவின் டேன்ஜர் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 29-வது நிமிடத்தில் முதல் கோலை மொராக்கோ வீரர் சோபியானே பாவ்ஃபெல் பதிவு செய்தார். அதற்கான ஈக்வளைஸரை பிரேசிலின் கேஸ்மிரோ 67-வது நிமிடத்தில் பதிவு செய்தார். இருந்தும் அடுத்த 12 நிமிடங்களில் மொராக்கோ வீரர் அப்துல்ஹமீத் சபிரி மற்றொரு கோலை பதிவு செய்தார். இவர் சப்ஸ்டிட்யூட் வீரராக களம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பலனாக ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியை பார்க்க சுமார் 65,000 பேர் மைதானத்தில் குழுமியிருந்தனர். மொராக்கோவின் வெற்றியை மைதானத்தில் போட்டியை காண குவிந்திருந்த ஒவ்வொரு பார்வையாளரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.