சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.
தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 3800 ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. அதனால் தான் வடமாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன. இவை அனைத்தையும் தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறை, அண்மையில் வெளியிட்ட ஆவணத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது.
தொடக்கப்பள்ளிகளிலும், நடுநிலைப்பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுவதை ஈராண்டு திட்டமாக செயல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். அந்த இடங்களை நிரப்பும் வகையில், ஆண்டுக்கு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 80 ஆயிரம் பேருக்கும், விரைவில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.