கார பூரண கொழுக்கட்டை செய்ய ஈஸி ரெசிபி!

Share

விநாயகர் சதுர்த்திக்கு பலவிதமான பலகாரங்கள் பல செய்வது வழக்கம் தான். பல பேர் இனிப்பு பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என பல வகையான இனிப்புகளை செய்ய திட்டமிட்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்கும் இனிப்பு பிடிக்கும் என சொல்ல முடியாது. சிலர் கார பலகாரங்களையே விரும்புவார்கள். அப்படி இருப்போர் கொழுக்கட்டை சாப்பிட ஆசை பட்டால் இந்த கார பூரண கொழுக்கட்டையை செய்து கொடுத்தால் ஆசையாக சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

கொழுக்கட்டை செய்வதற்கு,

  • இடியாப்பம்/ கொழுக்கட்டை மாவு (கடையில் வாங்கியது) – 3 கப்
  • தண்ணீர் – 5 கப்
  • உப்பு- 1 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்

பூரணம் செய்வதற்கு

  • உளுந்து – 1/3 கப்
  • பச்சை மிளகாய் – 4
  • உப்பு- 1/2 டீஸ்பூன்
  • பெருங்காய பொடி – 1/4 டீஸ்பூன்

பூரணம் தாளிக்க

  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2 முதல் மூன்று
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை :

முதலில் மாவு பிசைவதற்கு தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க விடுங்கள்.

கொதித்த பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியால் கிளறிக்கொள்ளுங்கள்.

மிதமான சூட்டிற்கு வந்த பின் கையால் நன்றாக அழுத்தம் கொடுத்து மிகவும் தண்ணீராக இல்லாமல் மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் சப்பாத்தி மாவு பதத்தை விட சிறிது தளதள வெண இருக்குமாறு பிசைந்து கொள்ளுங்கள்.

அதன்பின்னர் கொழுக்கட்டை செய்ய வட்ட வடிவம் சரியாக வருகிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். அதனை ஒரு ஒரு ஈர துணியால் மூடி ஓரமாக வைக்கவும்.

அடுத்து பூரணம் செய்ய உளுந்தை 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊற வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காய தூள் உளுந்து சேர்த்து கரகர வென பல்ஸ் மோடில் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் இட்லி பாத்திரம் அல்லது இடியாப்ப தட்டில் முழுவதுமாக துணியை விரித்து அதில் அரைத்த மாவை சேர்த்து பரவாலாக பரப்புங்கள்.

இட்லி பாத்திரத்தில் வைத்து மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் ஆறிய பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் உதிரி உதிரியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பூரணத்தை தாளிக்க ஒரு பேனில் 1 1/2 டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொரிந்ததும் அரைத்து வைத்த உளுந்தை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் கொழுக்கட்டை மாவை வட்டமாக பிடித்து அதில் 1 ஸ்பூன் கார பூரணத்தை வைத்து பிரை நிலவு போல் பிடித்து மாவு முழுவதுமாக மூடுமாறு பிடித்து கொள்ளுங்கள்.

கொழுக்கட்டையை 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து கொண்டால் சுவையான கார பூரண கொழுக்கட்டை தயார்.

First published:

Tags: Kara Kolukattai Recipe in Tamil, Kolukattai Recipe in Tamil, Vinayagar Chathurthi

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com