செஸ் விளையாட்டில் முன்னணி வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இவர் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டி ஒன்றுக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தது சர்ச்சையானது. நியூயார்க்கில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த கார்ல்சனுக்கு ஃபிடே அமைப்பு அபராதம் விதித்து, ஜீன்ஸ்சை மாற்றிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுமாறு வார்னிங் தந்தது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கார்ல்சன்.
இதையடுத்து, ‘ஜீன்ஸ் உடைக்கும் செஸ் விளையாட்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அதனால் ஒரு வீரருக்கு சாதக பாதகங்கள் இருக்கின்றனவா?’ என ஒரு சாராரும், ‘விளையாட்டில் கில்லியானாலும் விதிமுறைகளை மதிக்கத் தெரியாதவர் கார்ல்சன்’ என இன்னொரு சாராரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல் நடத்தினார்கள். என்றாலும் இரண்டே நாள்களில் ஆடை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, வீரர்கள் ஜீன்ஸ் அணிந்து தொடரில் பங்கேற்க ஃபிடே அனுமதி வழங்கியது. இதையடுத்து, இத்தொடரின் நடப்பு சாம்பியனான கார்ல்சன், மீண்டும் போட்டிக்குத் திரும்பினார். – வசி