அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்னையின் பெயர் conversion reaction. அதாவது, மனதில் இருக்கிற ஒரு பிரச்னை இன்னொரு பிரச்னையாக உடலில் வெளிப்படும். தன்னுடைய காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால், மனஅழுத்தத்தில் இருந்திருக்கிறார் அந்தப் பெண். நம் ஊர் கல்யாணங்களில் ஜாதி, மதம், கல்வி, பணம், தோஷம் என்று பல தடைகள் இருக்கின்றன. காதலுக்கு இவையெல்லாம் தெரியாதே… மன அழுத்தம் ஒருகட்டத்தில், ஃபிட்ஸாக வெளிப்பட்டிருக்கிறது. பிரச்னை சீரியஸாக இருந்ததால், அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பித்தது.
அந்தப் பெண்ணின் அப்பாவிடம், ‘காதல் கைகூடாததுதான் தன்னுடைய ஃபிட்ஸுக்கு காரணம் என்பது உங்கள் மகளுக்குத் தெரிகிறதா என்பதை அறிவியல்பூர்வமாக உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால், நீங்கள் மறுத்தால் பிரச்னை தீவிரமாகலாம்’ என்று விஷயத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால், தீர்மானமாக மறுத்து விட்டார். இதை எப்படி சரிசெய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்த அப்பாவுக்கு திடீரென உடம்பில் ஒரு பிரச்னை. எமர்ஜென்சி என மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு எங்கள் மருத்துவர்கள்தாம் சிகிச்சையளித்து காப்பாற்றினார்கள். அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு, மறுபடியும் மகளுடைய காதலை பற்றி எடுத்துச்சொல்லி, இன்றைக்கு காலம் மாறிவிட்டது என்பதையும் புரிய வைத்தோம். சரியான நேரத்தில், அவருடைய உயிரைக் காப்பாற்றியதாலும், ‘போருக்குச் செல்கிற ராணுவ வீரர்களுக்கு, இந்தப் போரில் தான் இறப்பது உறுதி என்பது தெரிந்தால், அவர்களில் சிலருக்கு பக்கவாதத்தில் கை, கால் விழுந்து விடும். இவர்கள் உடல்கூறுபடி நார்மலாக இருப்பார்கள். மனதில் இருக்கிற பயத்தால், கை, கால் செயல்படாமல் போயிருக்கும். இதுவும் conversion reaction பிரச்னைதான்’ என்று அறிவியல்பூர்வமான விளக்கங்களைச் சொன்னதாலும், எங்களுடைய வார்த்தைகளுக்கு காது கொடுத்தார். மகளுக்கு, அவர் விரும்பிய ஆணையே திருமணம் செய்து வைத்தார். காதலால் ஏற்படுகிற மன அழுத்தம் ஃபிட்ஸ் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்” என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.