வெளிநாடுகளில், காண்டம் பயன்படுத்தியும் பிறந்த குழந்தைகளை தங்கள் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ‘இவன் என் காண்டம் கிழிஞ்சதாலே பொறந்தவன்’ என்று விளையாட்டாக கேலி செய்வார்களாம். அந்தளவுக்கு காண்டம் கிழிவது சாதாரண நிகழ்வாகத்தான் இருக்கிறது. காண்டம் கிழிந்து பெண்ணுறுப்புக்குள்ளேயே தங்கிவிட்டால் பிரச்னையாகுமா என்பதுபற்றி ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
”காலை நேரம்…. முதல் பேஷன்ட்டாக அந்தத் தம்பதியர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வெகு பதற்றமாக இருந்தார்கள். கணவர்தான் பேசினார். ‘டாக்டர், நேற்று செக்ஸ் வெச்சுக்கிட்டோம். எல்லாம் முடிந்து காண்டமை கழட்டுறப்போ அதுல கொஞ்சம் கிழிஞ்சிருச்சு. கிழிஞ்ச துண்டு வொய்ஃப் உடம்புக்குள்ள போயிடுச்சு. யூரின் போறப்போவும் வெளியே வரலை. அதை எப்படியாவது எடுக்கணும். அவங்க ரொம்ப பயப்படுறாங்க’ என்றார் படபடப்பாக. உடனடியாக, மகப்பேறு மருத்துவரின் உதவியுடன், உள்ளே இருந்த காண்டம் துண்டை வெளியே எடுத்தோம்.
தாம்பத்திய உறவுகொள்ளும்போது, காண்டம் கிழிந்து மனைவியின் உறுப்புக்குள் தங்கி விட்டால், பயப்படவே தேவையில்லை. ஏனென்றால், அந்த ஆண் பயந்ததுபோல அது பெண்ணின் உடம்புக்குள் போகாது… போகவும் முடியாது… பெண்ணுறுப்புக்குள்ளேயே தங்கவும் செய்யாது. உறவு முடிந்தவுடன் சிறுநீர் கழித்தால், அதனுடனே சேர்ந்து வெளிவந்து விடும். ஒருவேளை வரவில்லையென்றால், சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய விரலைப் பயன்படுத்தியே வெளியே எடுத்து விடலாம். இப்படி எடுக்க முடியவில்லையென்றால், மகப்பேறு மருத்துவரை அணுகினால், அவர் ஃபோர்செப்ஸ் மூலம் எடுத்துவிடுவார்.
‘காண்டம் கிழிந்துவிட்டதால் மனைவி கருத்தரித்து விடுவாரோ’ என்று பயப்படுபவர்கள், உடனடியாக மருத்துவரை ஆலோசித்து கருத்தடை மாத்திரையை (emergency contraceptive pill) சாப்பிட்டாலே போதும். அறிமுகமில்லா நபர்களுடன் உறவுகொள்ளும்போது காண்டம் கிழிந்தால்தான் பயப்பட வேண்டும். ஏனென்றால், அது இருபதுக்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம். வாழ்க்கைத்துணையுடன் உறவுகொள்ளும்போது, பயப்படவே தேவையில்லை” என்கிறார் டாக்டர் காமராஜ்.