நன்றி குங்குமம் தோழி
தொடரும் கட்டுக்கதைகளுக்கு ‘ஃபுல்ஸ்டாப் வைக்கும்’ இயன்முறை மருத்துவம்!கழுத்து வலின்னு போய் டாக்டர பார்த்தேன். ‘காலர் போட சொன்னாங்க எப்பவும்’, கால் மூட்டு வலிக்கு ‘கீழ தரையில இனிமே உக்கார கூடாதுன்னு சொல்லிட்டாங்க’ என பலர் சொல்லிக் கேட்டு இருப்போம். அவர்களிடம் விசாரித்தால் கீழே உட்கார்ந்து சம்மணமிட்டு குறைந்தது ஐந்து வருடமாவது ஆகியிருக்கும். சிலருக்கு பத்து வருடங்கள் கூட ஆகியிருக்கும். அப்படிப்பட்டவர்கள் ‘காலர் பெல்ட், இடுப்பு பெல்ட் முழுநேரமும் போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா..?’
இன்றைக்கு இடுப்பு பெல்ட் போட்டிருப்பது கூட வெளியே தெரியாத அளவிற்கு நவீன பெல்ட்டுகள் வந்துவிட்டது. அதனால் வெளியே செல்லும்போது ஆடைக்கு உள்ளே தெரியாமல் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அதை எப்போது போடவேண்டும், எப்படிப் போடவேண்டும், எவ்வளவு நேரம், காலம் பயன்படுத்த வேண்டும் என்பது அனைத்துக்குமான கேள்வியாக இருந்து வருகிறது. அதற்கான பதில்களை நாம் இங்கே பார்ப்போம். அத்தோடு, இயன்முறை மருத்துவம் மற்றும் சார்ந்த சில பொதுவான கட்டுக்கதைகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் தெரிந்துகொள்வோம்.
*கழுத்து காலர் பெல்ட்
கழுத்து வலி என எலும்பு மருத்துவர்களிடம் சென்றால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் காலர் பெல்ட் பரிந்துரைப்பார்கள். உண்மையில், காலர் பெல்ட் என்பது இறுதிக்கட்ட எலும்புத் தேய்மானம் போன்ற இறுதிநிலை கழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே போட வேண்டிய ஒன்று. அதேபோல குளிக்கும் நேரம் தவிர்த்து மற்றநேரம் முழுவதும் போடவேண்டிய தேவை இல்லை. ஆரம்பநிலை கழுத்து பிரச்சினை இருப்பவர்கள் நெடுந்தூர பயணங்களின்போது அணிந்தாலே போதுமானது.
மேலும், தொடர்ந்து பெல்ட் அணிவதால், கழுத்து தசைகள் பலவீனமாகும். இதனாலும் கழுத்து வலி வரும் என்பதால் காலர் பெல்ட்டை தவிர்ப்பது நல்லது. அதோடு, போதிய இயன்முறை மருத்துவப் பயிற்சிகள் தொடர்ந்து செய்துவந்தாலே எலும்பு, தசைகள் சார்ந்த பிரச்சினைகள் வராது என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
*சம்மணமிட்டு அமர்தல்
கால் மூட்டுவலி என மூட்டு மருத்துவரிடம் சென்றால் கீழே உட்காரக் கூடாது எனக் கூறுவர். இதனால் நாற்காலியில் உட்கார்ந்துப் பழகி, சம்மணமிட்டு உட்காருவதை முற்றிலும் மறந்து விடுகின்றனர். இதன் காரணமாக இடுப்பு மற்றும் கால் முட்டியை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமாக மாறும். விளைவாய் கால் முட்டிவலி முழுமையாக தீர்வடையாது. மேலும் மோசமான நிலைக்கே கால் மூட்டுகளை இது இட்டு செல்லும். கூடவே, ஒரு நாளில் இரு தடவையாவது கீழே உட்கார வேண்டும். கட்டிலில், நாற்காலியில் அமரும்போதும் சம்மணமிட்டு அமர்வதை பழகவேண்டும்.
*இந்திய முறை கழிவறை
ஐம்பது வயதிற்கு மேல் நீண்ட வருடங்களாக மூட்டுவலி இருப்பவர்கள் வேண்டுமெனில் அயல் நாட்டு முறை கழிவறையை பயன்படுத்தலாம். அதற்கு முன் மூட்டுவலி இருப்பவர்கள் இந்திய முறை கழிவறை பயன்படுத்துவதே சிறந்தது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆறு முதல் பத்து முறைதான் கழிவறையை பயன்படுத்துவோம் என்பதால் இதனையே பயன்படுத்தலாம். மூட்டுகளுக்கு வேலையே கொடுக்காமல் இருந்தாலும் மூட்டுவலி வரத்தான் செய்யும். மேலும் எல்லா வகையிலும் இந்திய முறை கழிவறைதான் சிறந்தது என்பதனையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
*இடுப்பு பெல்ட்
எப்படி கழுத்து வலிக்கு காலர் பெல்ட்டோ, அதுபோல தான் இடுப்பு வலிக்கு இடுப்பு பெல்ட் என மூட்டு மருத்துவர்கள் இதனை பரிந்துரைப்பர். காலர் பெல்ட் போல இதையும் நெடுந்தூர பயணங்கள் செல்லும்போது மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.
*வாழ்வியல் ‘கால் வலி வந்துடுச்சுனா, இனி அதிகம் நடக்காதீங்க’, ‘வயசாய்டுச்சு, இனிமே இந்த கொரோனா டைம்ல வெளியே போகவேண்டாம்’ என பல அறிவுரைகளை பலரும் வழங்குவர். அது முற்றிலும் தவறு. நடக்காமல் இருந்தால், வேலைகள் செய்யாமல், வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் ‘தாங்கும் திறன்’ குறைந்து விடும். இதனால் சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது, சீக்கிரத்தில் நோய் தொற்றுக்கள் (சளி பிடிப்பது முதல் பெரிய தொற்றுகள் வரை) போன்றவை ஏற்படலாம்.
*தசைகளின் வலிமை
வயதாகிவிட்டால் இனி எதுவும் செய்யவேண்டாம் என வீட்டில் உள்ளவர்கள் பெரியவர்களுக்கு நல்லது செய்வதாய் எண்ணி சொல்வதை பார்க்கலாம். ஆனால் நாம் தசைகளை உபயோகிக்காமல் இருந்தால், தசைகள் தன் வலிமையை இழக்கும். இதனால் உடல் வலி, வயதாவதால் கீழே விழுவது போன்ற விஷயங்கள் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே வீட்டில் தன்னால் முடிந்தவரை ஏதோ ஒன்றை செய்ய வேண்டும். தொடர்ந்து உடல் ரீதியாய் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். முடிந்தால் இயன்முறை மருத்துவர் ஆலோசனைப் பெற்று உடற்பயிற்சிகள் செய்யலாம்.
*இயன்முறை மருத்துவ உபகரணங்கள்
வலியினை குறைக்க இயன்முறை மருத்துவத்தில் சில உபகரணங்கள் பயன்படுத்துவோம். அதனை உபயோகிக்கும் போது தசைகளில் மெல்லிய அதிர்வுகள் ஏற்படும். மெல்லிய சுடு உணர்ச்சி தோன்றுவது போல இருக்கும். இதனால் ‘கரண்ட்’ உடலில் பாய்ச்சுவதால், ஷாக் அடிக்கும் என நினைப்பர். இது தேவையற்ற குழப்பம். மேலும் இந்தவகை கரண்டினை புற்றுநோய்க்கு பயன்படுத்தும் ‘ரேடியேஷன்’ வகையை சார்ந்தது என நினைத்து முடி கொட்டுமா? ரத்தம் சுண்டிவிடுமா? என பலர் சந்தேகம் கொள்வர். பயப்பட வேண்டாம். இது முற்றிலும் மருத்துவத்திற்காகவே பயன்படுத்தப்படும் கரண்ட் வகைகள். அதனால் இதில் எந்த பக்கவிளைவுகளும் வராது.
*எடை தூக்குவது
இடுப்பு வலி வந்தாலே குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யக்கூடாது. எடையான பொருட்களை தூக்கக்கூடாது என சொல்வர். இது முற்றிலும் கட்டுக்கதை. இயன்முறை மருத்துவம் மூலம் வலி முற்றிலும் சரியான பின்பு, தேவையான உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொண்டு செய்து வந்தால் இயல்பாக நம் வேலைகளை நாம்
எப்போதும் போல செய்து கொள்ளலாம்.
*கர்ப்ப கால உடற்பயிற்சிகள்
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்தால் கரு கலைந்துவிடும், கருப்பை இறங்கிவிடும் என பல பெண்கள் அஞ்சுவர். இதுவும் கட்டுக்கதையே. ஒவ்வொரு பெண்களின் உடல் தேவைக்கேற்ப, பிரச்சனைகளுக்கேற்ப உடற்பயிற்சிகளை மாற்றி அமைத்து இயன்முறை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். எனவே பயமும், குழப்பமும் தேவை இல்லை. நீங்கள் IVF போன்ற செயற்கை கருத்தரிப்பு முறையை செய்யப் போவதாய் இருந்தாலும், உடற்பயிற்சிகளை தாராளமாக செய்யலாம்.
*இயன்முறை மருத்துவம் வலிக்கு மட்டும் தானா…?
இயன்முறை மருத்துவர்கள் உடல் மூட்டுகளில் உள்ள வலியை மட்டும் குணப்படுத்தும் மருத்துவர் என்று பலர் எண்ணியிருப்பர். அப்படியில்லை. இயன்முறை மருத்துவர்கள் உடல் எடை குறைப்பு, அதிகரிப்பு போன்ற fitness சார்ந்தவற்றையும் கையாள்வார்கள். மேலும், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இயன்முறை மருத்துவர்கள் பார்ப்பார்கள். கூடவே, விளையாட்டு வீரர்களுக்கும் உடற்பயிற்சிகள் பரிந்துரை செய்வர்.
*மற்ற மருத்துவர்களின் பரிந்துரை அவசியமா…?
அவசியம் இல்லை. உடலில் மூட்டுகளில் ஏதேனும் வலி இருந்தால் பொது மருத்துவரையோ, எலும்பு அல்லது நரம்பு சார்ந்த மருத்துவர்களையோ பார்த்துவிட்டு, பின் இயன்முறை மருத்துவரை அணுகவேண்டிய அவசியம் இல்லை.
*ஜிம் இனி தேவைதானா…?
அதேபோல, Fitness-க்கு ஜிம்மிற்கு செல்லவேண்டிய அவசியமும் இல்லை. இயன்முறை மருத்துவ மையத்திலேயே செய்யலாம். மேலும் இயன்முறை மருத்துவர் இருக்கும் உடற்பயிற்சி கூடமாய் பார்த்து சேர்வது சிறந்தது. ஏனெனில் ஜிம்மில் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகளை கற்றுத்தர மட்டுமே தெரியும். குறிப்பிட்ட வகை பயிற்சிகள், குறிப்பிட்ட நபர்களுக்கு தேவைதானா? அதை எத்தனை முறை, எவ்வளவு நாட்கள் செய்யவேண்டும்? போன்ற பல விஷயங்கள் இயன்முறை மருத்துவர் பரிந்துரைப்படியே செய்யமுடியும்.
*ஆன்லைன் இருக்க உடற்பயிற்சி செய்ய இயன்முறை மருத்துவர் எதற்கு?
ஒரு மாதத்திற்கு முன் ஒரு நடுத்தர வயது பெண் ஒருவர், கடுமையான மூட்டு வலியோடு வந்தார். எப்படி ஏற்பட்டது என விசாரித்ததில் / பரிசோதனை செய்ததில், தினந்தோறும் யூடியூப் சேனல் பார்த்து தினமொரு வீடியோக்களில் வருவதை செய்ததாகக் கூறினார். இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சியை பொறுத்தவரையில் ஒவ்வொரு உடலின் தேவைக்கேற்ப, உடல் ஆரோக்கிய நிலைக்கு ஏற்ப உடற்பயிற்சிகள் மாறுபடும். இதனால் கட்டாயம் இயன்முறை மருத்துவரின் தக்க ஆலோசனையுடன் Fitness பயணத்தை தொடங்கவேண்டும். இல்லா விட்டால் தசையில் பாதிப்பு, மூட்டுவலி போன்றவை நிச்சயம் ஏற்படும்.
*இன்ஷுரன்ஸ்
அறுவை சிகிச்சை, மற்ற மருத்துவ முறைகளுக்குதான் மருத்துவ காப்பீடு இருக்கிறது என நினைக்க வேண்டாம். இயன்முறை மருத்துவத்துக்கும் உண்டு. எனவே, இவைகளை பயன்படுத்தலாம். ஆகவே மருந்தில்லா மருத்துவமான இயன்முறை மருத்துவம் பற்றிய போதிய புரிதல்கள் இருப்பது நம் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதனை நாம் உணர்ந்து, அதற்கேற்ப அறிந்து அதன் முழு பயன்களை பெற்று நாளும் சிறப்பாய் வாழ்வோம்.