கீழ்வாய்நெல்லி, கீழ்க்காய்நெல்லி போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இலைகளுக்கு கீழ்ப்புறமாக நெல்லி வடிவில் சிறு அளவிலான காய்கள் இருப்பதால் `கீழா’ நெல்லி என்று பெயர் பெற்றிருக்கிறது. `செங்கீழாநெல்லி’ எனும் வகை, வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் சிறந்த மூலிகை!
மஞ்சள்காமாலை எனும் பெயரை உச்சரித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது… மஞ்சள் நிற கண்கள் நினைவுக்கு வரலாம்… மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர் ஞாபகத்துக்கு வரலாம்… அப்படித்தானே? ஆனால், மஞ்சள் காமாலை எனும் பெயரைக் கேட்டவுடன், ஒரு சித்த மருத்துவனாக எனக்கு நினைவுக்கு வருவது அதைக் குணப்படுத்த உதவும் கீழாநெல்லி தான்! காமாலை நோயைக் குணப்படுத்த பன்னெடுங்காலமாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பான மூலிகை கீழாநெல்லி.
பித்த நோய்களுக்கு…
பித்தம் சார்ந்த நோய்களின் தீவிரத்தைக் குறைக்க, குளிர்ச்சித்தன்மை பொருந்திய கீழாநெல்லியின் உதவியால் செய்யப்படும் சித்த மருந்துகள் அதிக அளவில் பயன்படுகின்றன. உடலுக்குத் தேவைப்படும் குளிர்ச்சியை வழங்குவதால் கீழாநெல்லியை `இயற்கையின் ஏர்-கூலர்’ என்று அழைக்கலாம். சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர்ப்பாதை தொற்றுகளை நீக்கவும் கீழாநெல்லி பரிந்துரைக்கப்படுகிறது.
அறுசுவை தத்துவம்
இனிப்பு, புளிப்பு, உப்பு, கைப்பு (கசப்பு), கார்ப்பு, துவர்ப்பு எனும் அறுசுவைகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பீர்கள் அல்லவா! பொதுவாக, பல மூலிகைகளுக்கு ஏதாவது ஒரு சுவை பிரதானமாக இருக்கும். அது இனிப்பாக இருக்கலாம் அல்லது காரம், கசப்பாக இருக்கலாம். சுவை சார்ந்து கீழாநெல்லியின் சிறப்பு என்ன தெரியுமா! கைப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு என நான்கு சுவைகளின் அற்புதக் கலவையைக் கொண்டிருக்கும் மூலிகை கீழாநெல்லி.