அரசு மருத்துவமனைகளில் கர்ப்பபை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளனவா என்றும் இப்புற்றுநோய்க்கு மூலகாரணியாக விளங்கும் Human Papilloma Virusக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்றும் அரசு பெண்கள்நல சிறப்பு மருத்துவர் இர்ஃபானாவிடம் கேட்டோம்…
“கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மூலகாரணியாக விளங்கும் Human Papilloma Virusக்கு இந்தியாவில் Cervarix, Gardanil ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில்தான் செலுத்தப்பட்டு வருகின்றன.
இப்புற்றுநோயைக் கண்டறியும் பாப் ஸ்மியர் பரிசோதனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. பிறப்புறுப்புப் பகுதியில் இப்புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படும் நிலையில் பாப் ஸ்மியர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கும் அடுத்தகட்டமாக கால்போஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளும்போது இன்னும் துல்லியமாக புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும். கண்ணால் பார்ப்பதை விட கால்போஸ்கோபி மூலமாக பார்க்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், எந்த அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டறிய முடியும். இப்பரிசோதனைக்குப் பிறகு பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படும்.
கர்ப்பப்பை வாயில் மரு, புண் ஏதுமில்லாமல் நன்றாக இருக்கிறதென்றால் கால்போஸ்கோபி பரிசோதனை தேவைப்படாது. பாப் ஸ்மியர் பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்பட்டு பயாப்ஸிக்கு அனுப்பப்படும். பார்த்தாலே புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிகிற நிலையில் பாப் ஸ்மியர் பரிசோதனை தேவையில்லை. கால்போஸ்கோபி மூலம் பரிசோதனை செய்துவிட்டு பயாப்ஸிக்கு அனுப்பப்படும். புற்றுநோய் உறுதி செய்யப்படும் நிலையில் அதற்கான கதிர்வீச்சு சிகிச்சைகளும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகின்றன” என்கிறார் இர்ஃபானா.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக டெல்லியில் 2016ம் ஆண்டிலிருந்து HPVக்கான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து 2017, 2018ம் ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் சிக்கிம் மாநிலங்களிலும் இத்தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட ஆரம்பித்தன. இந்நிலையில், பொது மருத்துவத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிலும் இத்தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.