கடைசியாக 2016-17 சீசனுக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ UEFA பெஸ்ட் பிளேயர் விருதை வென்றிருந்தார். அதன்பிறகு அவரோ மெஸ்ஸியோ இந்த விருதை வெல்லவில்லை. இருந்தாலும் குறைந்தபட்சம் டாப் 4 இடங்களிலாவது இருவரும் இடம்பெற்றுவிடுவார்கள். ஆனால், இந்த முறை டாப் 15 இடங்களில் கூட இருவரும் இல்லை. இதன்மூலம் அந்த இரு மகத்தான ஜாம்பவான்களின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் கிலியன் எம்பாப்பே, நெய்மர் இருவருக்கும் அடுத்தே மெஸ்ஸி முக்கியத்துவம் பெறுகிறார். கடந்த சீசன் அவருடைய செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடட் அணியோடு சேர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார். அதனால், இது நிச்சயம் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது!
பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் லயானஸ், வோல்ஸ்பெர்க், எய்ன்ட்ராக்ட் ஃபிராங்க்ஃபர்ட் அணி வீராங்கனைகள்தான் பெரிதாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 2016-17 சீசனில் மட்டும் பார்சிலோனா வீராங்கனை லீகி மெர்டன்ஸ் வென்றிருந்தார். அதன்பிறகு மீண்டும் லயான், வோல்ஸ்பெர்க் தான். ஆனால் இப்போது அதை மாற்றியிருக்கிறார் அலெக்சியா புதேயாஸ். பார்சிலோனா அணியின் மையப்புள்ளியாக விளங்கிவரும் அவர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பியக் கால்பந்தில் கோலோச்சிவருகிறார். பெண்கள் லா லிகா பார்சிலோனா இரண்டாவது ஆண்டாக வெல்வதற்கும், கடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரை அந்த அணி வெல்வதற்கும் மிகமுக்கியக் காரணமாக இருந்திருக்கிறார் அவர். கடந்த ஆண்டு பாலன் டி ஓர், ஃபிஃபா பெஸ்ட் பிளேயர், UEFA பெஸ்ட் பிளேயர் என அனைத்து விருதுகளையும் அள்ளியவர், இப்போது இரண்டாவது சுற்றைத் தொடங்கியிருக்கிறார்!