கனடாவில் நடைபெற்ற சீக்கிய நிகழ்ச்சியொன்றில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்படுவது போன்ற சித்திரிப்புக் காட்சியை ஊர்வலமாகக் கொண்டுசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதியான பிராம்ப்டன் நகரில் கடந்த 4-ம் தேதி `சீக்கியப் படுகொலையின் நினைவுநாள்’ அனுசரிக்கப்பட்டது. காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களால் நடத்தப்பட்ட அந்தப் பேரணியில் `WE NEVER FORGET 1984 – SIKH GENOCIDE’ என்ற வாசகத்துடன் ஓர் அணிவகுப்பு வாகனமும் பங்கேற்றது. அந்த வாகனத்தில் `ஶ்ரீ தர்பார் சாஹிப் தாக்குதலுக்கான பழிவாங்கல் -REVENGE’ என்று எழுதப்பட்ட பதாகையின் முன்னணியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதுபோன்ற சித்திரிப்பு சிலைகள் காட்சியமைக்கப்பட்டிருந்தன. ரத்தம் தோய்ந்த வெள்ளை சேலையில் கைகள் உயர்த்தப்பட்ட நிலையில் இந்திரா காந்தியின் உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சிகள் இணைதளங்கள், சமூக வளைதளங்கலில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மலிந்த தியோரா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான வீடியோவைப் பகிர்ந்து, “இந்திரா காந்தியின் படுகொலையைச் சித்திரித்து கனடாவின் பிராம்டன் நகரில் 5 கி.மீ. தூரத்துக்கு நடந்த இந்த ஊர்வலத்தைக் கண்டு ஓர் இந்தியனாக நான் அதிர்ச்சியடைந்தேன். இது ஒரு தரப்பினைப் பற்றி மட்டும் பேசுவது இல்லை. இது ஒரு நாட்டின் வரலாற்றின் மதிப்பு சம்பந்தப்பட்டது. அதன் பிரதமரின் படுகொலை உண்டாக்கிய வலியைப் பற்றியது. இந்த அத்துமீறல் நிச்சயம் உலகின் கண்டனத்திற்குரியது” என்று பதிவிட்டிருக்கிறார். அதேபோல, காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது மிகவும் வெட்கக்கேடானது; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக கனடா அதிகாரிகளிடம் இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்!” என்று தெரிவித்திருக்கிறார்.
As an Indian, I'm appalled by the 5km-long #parade which took place in the city of Brampton, Canada, depicting the assassination of #IndiraGandhi.
It's not about taking sides, it's about respect for a nation's history & the pain caused by its Prime Minister’s assassination.… pic.twitter.com/zLRbTYhRAE
— Milind Deora | मिलिंद देवरा ☮️ (@milinddeora) June 7, 2023

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது போன்ற நிகழ்வுகள் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுக்கு நல்லதல்ல; பிரிவினை, பயங்கரவாத இயக்கங்களுக்கு இது போன்று இடம் தருவது என்பது மிகத்தீவிரமான பிரச்னையாகும். வாக்குவங்கி அரசியலுக்காக இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது ஏற்கக்கூடிய காரியம் அல்ல!” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல,வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, “எந்தவொரு ஜனநாயக ஆட்சியில் படுகொலை அல்லது கொலை நடந்தாலும் அது மிகப்பெரிய குற்றம்தான். அப்படிப்பட்ட பெரும் குற்றமான ஒரு செயலைக் கொண்டாட முடியாது; எனவே, இந்திரா காந்தி படுகொலையைச் சித்திரித்தவர்கள்மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, புதுடெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா தூதர் கேம்ரான் மேக்கி, “கனடாவில் நடந்த ஒரு நிகழ்வில், மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாடப்பட்டதாக வந்த தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியுற்றேன். கனடா இதுபோன்ற வெறுப்புகளுக்கோ, வன்முறையைப் புனிதப்படுத்துவதற்கான இடமோ இல்லை. இந்த நடவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக, கனடாவின் சர்வதேச விவகாரத்துறைக்கு, ஒட்டோவாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக கனடா அரசுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி படுகொலையை காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் கொண்டாடியது ஏன்?
1984-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தனிநாடு கோரும் சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பினரை ஒழித்துக்கட்ட முடிவெடுத்தார். அந்த சூழலில், காலிஸ்தான் அமைப்பின் தலைவரான பிந்தரன் வாலேவும் அவர் ஆதரவாளர்களும் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் இந்திரா காந்தி தனது `ப்ளூ ஸ்டார்’ ஆபரேஷன் மூலம், பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த பிரிவினைவாதப் போராளிகளைச் சுட்டுப்பிடிக்க ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 1984 ஜூன் 1-ம் தேதி சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் நுழைந்த இந்திய ராணுவம் பிந்தரன் வாலே, அவர் ஆதரவாளர்களைச் சுட்டுக்கொன்றது.

இந்த நடவடிக்கையால் சீக்கியப் பொற்கோவிலும் உருத்தெரியாமல் சேதமடைந்தது. இது சீக்கியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பழித்தீர்க்கும் விதமாக, 1984 அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் இந்திரா காந்தியின் மெய்காவலர்களாக இருந்த இரு சீக்கிய வீரர்களே அவரை சுட்டுப் படுகொலை செய்தனர். இந்திரா காந்தியின் படுகொலையை அடுத்து காங்கிரஸ் கட்சிக்காரர்களால் தலைநகர் டெல்லி தொடங்கி பஞ்சாப் வரையிலுமுள்ள ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் வீடுகள் தீவைக்கப்பட்டன. சுமார் 2,800-க்கும் அதிகமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சீக்கியர்கள் மனதில், குறிப்பாக காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் மனதில் ஆறாத வடுவாய் இருக்கும் இந்தக் கோர சம்பவத்தை துக்கநாளாகவும், இந்திரா காந்தியின் படுகொலை நாளை பழிவாங்கிய நாளாகவும் அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது கனடாவில் வாழ்ந்துவரும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களால் நடத்தப்பட்ட துக்கநாள் அனுசரிப்பு பேரணியில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்படுவதுபோன்ற காட்சியை இடம்பெறச்செய்திருக்கின்றனர்.