நன்றி குங்குமம் டாக்டர்
தினசரி வாழ்வில் எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகளை நாம் மிக முக்கியமானவை என்று கருதுகிறோம்? எவற்றைக் கண்டு உடனடியாகப் பதற்றமடைந்து மருத்துவர் உதவியை நாடுகிறோம்? இந்தக் கேள்விக்கு உடனடியாக மாரடைப்பு, பக்கவாதம், பெரிய விபத்துக்கள் என்று வரிசையாக பதில் வரும். கால்களில் முள் குத்தினால் என்ன செய்வோம்? சிறிய முதலுதவி செய்துவிட்டு நேரம் கிடைக்கும்போது மருத்துவமனைக்குச் செல்வீர்கள். அதுவே கண்களில் முள் குத்தி விட்டால்? பதற்றத்துடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைவீர்கள். அப்படித்தானே?
கண் மருத்துவத்தில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று சொல்லக்கூடிய நோய்கள் பல இருக்கின்றன. இவற்றை Ocular emergencies என்கிறோம்.
அதில் ஒன்றினால் பாதிக்கப்பட்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியை நேற்று சந்தித்தேன். இரண்டு நாட்களாக வலது கண் சிவப்பாக இருக்கிறது, கண்ணைத் திறக்கவே முடியவில்லை, வலியும் இருக்கிறது, பார்வை சற்றுக் குறைவாக இருக்கிறது என்ற அறிகுறிகளுடன் அவர் வந்திருந்தார். பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது அவருக்கு வந்திருந்தது Angle closure attack என்று. இதயத்திற்கு வரும் ஹார்ட் அட்டாக்கைப் போல கண்களுக்கு இது ஒரு தீவிரமான தாக்குதல் தான். கண்களினுள் அக்வஸ் திரவம் தொடர்ந்து சுரந்துகொண்டே இருக்கும் என்பதை நாம் அறிவோம். அந்த திரவம் வெளியேறும் பாதை அடைத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய ஒரு அவசரநிலையே இந்த அட்டாக்.
இயல்பிலேயே சிறிய கண்ணை உடையவர்களுக்கு இந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். சிலியரி பாடி (ciliary body) என்ற கண்ணின் உள்ளுறுப்பிலிருந்து அக்வஸ் திரவம் சுரந்து கருவிழிக்குப் பின்பகுதியில் இருக்கும் முன் அறையில் (anterior chamber) நிறைந்திருக்கும். நிமிடத்திற்கு 2-3 மைக்ரோலிட்டர் என்ற வீதத்தில் நாள் ஒன்றுக்கு 3.6 மில்லிலிட்டர் திரவம் சுரப்பதும், அது கருவிழிக்குச் சற்றுப் பின்புறத்தில் கிருஷ்ண படலத்தின் ஓரத்தில் (angle) அமைந்திருக்கும் சிறு துகள்கள் போன்ற trabecular meshwork அமைப்பின் வழியே வெளியேறுவதும் 24 மணி நேரமும் நடக்கும் சீரான ஒரு சுழற்சி.
இந்த உருவாக்கத்திற்கும் வெளியேற்றத்துக்கும் நடுவே நிகழும் சமச்சீரற்ற தன்மையால் திடீரென கண்ணிற்குள் அழுத்தம் அதிகரித்து விடுவது உண்டு. கண்ணில் இருந்து அக்வஸ் திரவம் வெளியேறும் பாதை சற்று சுருங்கிய நிலையினை narrow angles என்று சொல்கிறோம். சுருங்கிய பாதையை உடைய கண்களில் ஆங்கிள் க்ளோசர் அட்டாக்கும் அதன் விளைவாக angle closure glaucoma என்ற கண்ணழுத்த நோயும் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இந்தச் சூழலை தடுப்பதற்காக 35 வயது முதலே வருடம் தோறும் செய்யப்படும் கண் பரிசோதனையில் கண்களின் anterior chamberன் ஆழம் (depth) எவ்வளவு இருக்கிறது என்று உங்கள் கண் மருத்துவர் கணிப்பார்.
ஆழம் குறைவாக இருக்கிறது, பின்னாளில் திடீரென்று அடைத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என்றால் தடுப்பு நடவடிக்கையாக லேசர் கதிர் மூலம் இரண்டு கண்களின் கிருஷ்ணபடலத்திலும் தலா ஒரு ஓட்டை போடுவதற்கும் மருத்துவர் பரிந்துரைப்பார் (YAG laser iridotomy).அடுத்தடுத்த பரிசோதனைகளின் போது அந்த ஓட்டை வழியாக அக்வஸ் திரவம் நன்றாக வெளியேறுகிறதா, இப்போது திரவம் வெளியேறும் பாதை நன்றாகத் திறந்திருக்கிறதா என்பதை மருத்துவர் சோதிப்பார். இப்படி வழக்கமான பரிசோதனையின் போது narrow angles கண்டறியப்படாமல், மேலே சொன்னது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் விரைந்து கண் மருத்துவரை நாட வேண்டியது அவசியம். அவர் கண் அழுத்தத்தைப் பரிசோதித்து நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு சிகிச்சையை உடனடியாகத் துவங்குவார்.
நேற்று சந்தித்த பெண்ணுக்கு கண்ணழுத்தம் மிக அதிகமாக இருந்தது. கண் அழுத்தமானியால் (tonometer) அளக்க முடிவதை விட மிக அதிகமான அளவில் இருந்தது. அதனால் உடனடியாக அக்வஸ் திரவம் சுரப்பதைக் குறைப்பதற்கான சொட்டு மருந்துகள், கண்ணிற்குள் அழுத்தத்தை குறைக்கும் விதமான மாத்திரைகள், ஊசி இவற்றை வழங்கினேன். ஓரிரு மணி நேரத்தில் வலியும் நீர் வடிதலும் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்றார் அந்தப் பெண்.
மருந்துகளைத் தொடரச் செய்து உடனடியாக லேசர் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தேன். சிகிச்சை செய்த அடுத்த நொடி அவர் இயல்பாகி விட்டார். இருந்தாலும் இரண்டு நாட்கள் அவர் தாமதித்தது தவறு. இடது கண்ணை விட, பாதிக்கப்பட்ட வலது கண்ணில் பார்வை மிகக் குறைவாகவே இருந்தது. Snellen’s அட்டையில் முதல் வரியை மட்டும் அவரால் படிக்க முடிந்தது. அந்த இரண்டு நாட்களிலும் வழக்கமாக இருக்க வேண்டிய அளவைவிட கண் அழுத்தம் மிக அதிகமாகவே இருந்திருக்கும். நிச்சயமாகக் கண் நரம்பின் சிறு நார்களில் வெகுவாகப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
6/60 (Snellen’s chartல் முதல் வரி) என்ற அளவிலிருந்து 6/18 Snellen’s chartல் நான்கு வரிகள்) என்ற அளவிற்கு ஒரே நாளில் பார்வை மீண்டுவிட்டது. இருந்தாலும் மீண்டும் பழைய அளவிற்குப் படிப்பது சிரமம் என்பதை அவருக்குக் கூறினேன். ஒரு கண்ணில் angle closure attack வந்து விட்டால் அடுத்த கண்ணிலும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய என்பதால் அதிலும் லேசர் சிகிச்சை செய்ய வேண்டும். ‘‘எனக்கு அந்தக் கண்ணுல ஒரு பிரச்சனையும் இல்லையே? அப்புறம் ஏன் அதற்கு லேசர் வைக்கணும்?” என்பது அவரின் கேள்வி. உடலில் இரண்டிரண்டாகப் பல உறுப்புக்கள் இருக்கின்றன, கண்கள், காதுகள், கைகள், கால்கள் என்று.
இரண்டில் ஒரு உறுப்பில் பாதிப்பு என்றாலும் மற்றதையும் பரிசோதனை செய்ய வேண்டும். உதாரணமாக, வலது காதில் நிறைய அழுக்கு (impacted wax) அடைத்துக்கொண்டுவிட்டது காது சுத்தமாக கேட்கவில்லை என்று வரும் நபருக்கு அந்தக் காதில் உள்ள அழுக்கை நீக்கிவிட்டு மற்ற காதையும் பரிசோதிப்பார் காது மூக்கு தொண்டை நிபுணர். அதில் தொந்தரவு கொடுக்கும் அளவுக்கு அழுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கேனும் நிச்சயம் அழுக்கு இருக்கத்தான் செய்யும். அதை அகற்றுவதே சிறந்தது. அதுபோலத்தான் இதுவும். இவை மனிதனுக்கு மனிதன் மாறுபடக்கூடிய உடற்கூறியல் மாறுபாடுகள்தானே, ஒழிய பெரிய தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இல்லை. விரைவில் கண்டுபிடிப்பதும் உடனே சிகிச்சையளிக்க வேண்டியதும் மட்டுமே முக்கியம். கண்ணழுத்தம் சற்று சீராகி, வலியும் அறிகுறிகள் குறைந்த பின் அந்தப் பெண்மணிக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. ‘‘எப்பவும் எனக்கு லோ பிரஷர் தான் வரும்.
இப்ப எப்படி கண்ணுக்குள்ள பிரஷர் அதிகமா ஆச்சு?” என்றார். இதுவும் பலரும் கேட்கும் கேள்விதான். ரத்த அழுத்தத்தையும் கண் அழுத்தமும் தொடர்புபடுத்தி சிந்திப்பவர்கள் நிறைய பேர். அடிப்படையில் இரண்டும் வேறு வேறு. கண்ணழுத்தம் என்பது கண் என்ற மூடிய சிறு பந்தினுள் நிகழும் மாற்றங்களால் ஏற்படுவது. ரத்த அழுத்தம் என்பது இதயம் மற்றும் அதனைச் சார்ந்த ரத்த நாளங்கள் அனைத்திலும் ஏற்படும் மாற்றங்களால் விளைவது.
எங்கள் மருத்துவமனையின் மருத்துவமனைப் பணியாளர் ஒருவருக்கும் இரவுநேரப் பணியின் போது இதே போல திடீரென ஒரு அட்டாக் நிகழ்ந்தது. அறிகுறி தோன்றிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே அவர் என்னிடம் வந்து விட்டார். அதனால் உடனடியாக மருந்துகள் மூலமாகக் கண் அழுத்தத்தை குறைத்தோம். மறுநாளே இரண்டு கண்களிலும் லேசர் சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த பரிசோதனையின் போது ஒரு கண்ணில் லேசர் சிகிச்சை மூலம் இடப்பட்டிருந்த துளை சரியாக இருந்தது, ஆனால் இன்னொரு கண்ணில் அந்தத் துளை அடைத்துக் கொண்டுவிட்டது. அதைச் சொல்லி இன்னொரு முறை லேசர் செய்யுமாறு அறிவுறுத்தினேன். அவர் அதை இன்று வரை அலட்சியம் செய்துவருகிறார்.
பார்க்கும் நேரம் எல்லாம் எங்கே நான் அதைப்பற்றிக் கேட்டு விடப் போகிறேனோ என்று நினைப்பில், ‘‘அடுத்த வாரம் லேசர் பண்ணப் போகணும்” என்று நான் கேட்பதற்கு முன்பு பதில் சொல்கிறார். இவருக்கும் முதலில் அறிகுறி ஏற்பட்டது வலது கண்ணில் தான். அதில் இடப்பட்ட லேசர் துளை நன்றாக இருக்கிறது, பிரச்சினை வராத கண்ணில் தானே அடைத்துக் கொண்டுள்ளது, பிறகு பார்க்கலாம் என்ற அலட்சியம் அவரிடத்தில் இருக்கிறது. அவருக்கு மற்றவர்களை விட கிருஷ்ணபடலத்தின் அடர்த்தி (thick iris) அதிகம். அதனால் என்றாவது ஒரு நாள் அந்தக் கண்ணிலும் திடீரென்று நீர்ப் பாதை அடைத்துக்கொண்டு விட்டால் என்ன செய்வது என்ற கவலை அவரை விட எனக்கு நிறையவே இருக்கிறது.
இந்தப் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நபர்களுக்கு திடீரென ஏற்படும் சில நிகழ்வுகள் (precipitating factors) ஒரு ‘அட்டாக்’கைத் தூண்டிவிடக்கூடும். கண்மணி (pupil) திடீரென விரிவடைந்துவிட்டால் கிருஷ்ண படலத்தின் ஓரங்கள் சென்று வெளியேற்றப் பாதைகளை மூடிவிடக் கூடும். சில சொட்டு மருந்துகள், மாத்திரை, ஊசி உட்பட சில மருந்துகளுக்கும் இந்த நிலையை ஏற்படுத்தி விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதைக் குறித்தும் சம்பந்தப்பட்ட நோயாளிகளும் அவர்களுக்குப் பிற சிகிச்சை அளிக்கும் அவர்களது குடும்ப மருத்துவர்களும் அறிந்திருப்பதும் அவசியம்!