இது குறித்து லியாகத்தின் தந்தை முகமது கௌஸ், “என் மகன் ஐ.டி.ஐ முடித்துவிட்டு சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் இரவுப் பணிக்குச் சென்றிருந்தபோது ரவுண்ட்ஸ் முடித்துவிட்டுத் தூங்கியிருக்கிறார். அப்போது அந்த அறைக்குள் வந்த கட்டுவிரியன் பாம்பு, அவரின் இடுப்புப் பகுதியில் கடித்துள்ளது. பிறகு பாம்பு அவர் மீது ஊறிச் சென்றதில் சுதாரித்துள்ளார். பாம்பு சென்றதைப் பார்த்துவிட்டு எழுந்துள்ளார்.
இடுப்புப் பகுதியில் ரத்தம் வர, பாம்புக் கடித்ததை உணர்ந்து கிணத்துக்கடவு பகுதி வரை, இருசக்கர வாகனத்தில்தான் சென்றார். அங்கு வாந்தி, மயக்கம் வந்ததால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு, சிகிச்சையளிக்க முடியாது என்று கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லச் சொன்னார்கள். கோவை அரசு மருத்துவமனையிலும், `பெரியளவுக்கு முன்னேற்றம் கிடைக்கவில்லை சிரமம்தான்’ என்றனர்.
சில தனியார் மருத்துவமனைகளிலும் விசாரித்தோம். கடைசியாக ஈரோட்டில் உள்ள மணியன் மெடிக்கல் சென்டருக்குச் சென்றோம். 25 நாள்கள் தொடர் சிகிச்சை பெற்றோம். படிப்படியாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆரம்பத்தில், மகனின் உடல் சில்லென்று ஆகிவிட்டது. உயிர் பிழைப்பதே கடினம் என்றுதான் சொன்னார்கள். 50 – 50 என்ற நிலைதான் இருந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளிக்க நாங்களும் பிரார்த்தனை செய்தோம். அதன் விளைவாக மீண்டு வந்திருக்கிறார். போன உயிர் திரும்பக் கிடைத்துள்ளது” என்றார் நெகிழ்ச்சியுடன்.