சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உருவம் உள்ள பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தின் உள்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதில் அனைத்து பேனர்களிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று எழுதப்பட்டு, அவர்களின் பெரிய படங்களும் இடம் பெற்றிருக்கும். கடந்த ஜூலை 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது அங்கிருந்த அனைத்து பேனர்களில் இருந்த எடப்பாடி பழனிசாமி படங்களை கிழித்து எறிந்து, சேதப்படுத்தினர். மேலும் பிரச்னை ஏற்படாமல் இருக்க கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. பின்னர், சீல் அகற்றப்பட்டு கட்சி அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்த பேனர்கள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது, வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரில் கூட ஓ.பன்னீர்செல்வம் பெயரோ அல்லது படமோ இடம் பெறவில்லை. அனைத்து பேனரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரும், படமும் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.