கங்காரு மதர் கேரில், பச்சிளங்குழந்தையின் உடல், தாயின் உடலோடு உடல் படும் வண்ணம் (Skin-to-skin contact), தாயின் உடைக்குக் கீழ், மார்பகங்களுக்கு இடையில் பச்சிளங்குழந்தையை செங்குத்தான நிலையில் கிடத்த வேண்டும். குழந்தையின் தலை, இடது அல்லது வலது புறமாக, கழுத்து சற்றே நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், குழந்தையும் தாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். குழந்தையின் இடுப்பு சற்றே வெளிப்புறமாக மடக்கிய (hip is flexed and abducted) நிலையில், `தவளையின் நிலையை’ (frog position) ஒத்திருக்க வேண்டும். குழந்தையின் கைகள் மடங்கி இருக்க வேண்டும். குழந்தையின் வயிறு, தாயின் வயிற்றின் மீது இருக்க வேண்டும். தாய் ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும், குழந்தைக்குத் தூண்டுதல் ஏற்படும்.
இதனால், குறைமாத பச்சிளங்குழந்தையில் ஏற்படும் பாதிப்பான குறுகிய நேர சுவாசம் நின்றுவிடுதல் (apnea) வெகுவாகக் குறைகிறது. தாய் தன் கைகளைக் கொண்டு, குழந்தையின் கீழ்ப்புறத்தைத் தாங்க வேண்டும். தாய், அரை சாய்வு நிலையில் (semi-reclining position) இருப்பது முக்கியமாகும்.
இந்த நிலையில், குழந்தையின் இரையக பின்னோட்டம் (gastric reflux) தடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக இதை கங்காரு நிலை (Kangaroo position) என்போம். கங்காரு நிலையில், எவ்வளவு நேரம் குழந்தை பொறுத்துக்கொள்கிறதோ, அதுவரை KMC-ஐ தொடரலாம்.