
“நான் தற்போது பள்ளியில் படித்து வருகிறேன், இன்னும் இரண்டு ஆண்டுகளில் கல்லூரிக்குச் செல்வேன். எனக்காக நீங்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்? ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பிறகு நிஜ வாழ்க்கையில் அவர்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? இந்தச் சமூகத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா?”
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் வசிக்கும் 17 வயது ஆஷி குஷ்வாஹாவைச் சந்தித்தபோது இந்த கேள்வியை நாங்கள் எதிர்கொண்டோம்.
2026 ஜனவரி 1 ஆம் தேதி காலை, குவாலியரின் ரிவர் கேட் அருகே கட்டப்பட்ட சுவரின் வீடியோவை ஆஷி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இந்தச் சுவரில் யோகா பயிற்சி செய்யும் பெண்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த ஓவியங்களின் அந்தரங்க உறுப்புகள் கீறப்பட்டுச் சிதைக்கப்பட்டிருந்தன.
வீடியோவைப் பதிவிட்ட பிறகுதான், இது வெறும் படங்களைச் சிதைப்பது மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் மீதும் நடத்தப்பட்ட ஒரு மோசமான கேலி விளையாட்டு என்பதை உணர்ந்ததாக ஆஷி கூறுகிறார்.
“இது ஒரு சிறிய இழப்பு அல்ல. இது ஒரு மோசமான எண்ணம், அழுக்கான மனநிலை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்” என்று ஆஷி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
முழு விவகாரம் என்ன?

ஜனவரி 1-ஆம் தேதி காலை, ஆஷி தனது தோழியுடன் குவாலியரின் ரிவர் கேட் வழியாக ஜெய் விலாஸ் அரண்மனை நோக்கி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போதுதான் சுவரில் பெண்களின் உருவங்கள் சிதைக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்தார்.
ஆஷி கூறுகையில், “அதைப் பார்ப்பது எங்களுக்கு சங்கடமாக இருந்தது மட்டுமல்லாமல், ‘ஏன் பெண்கள் மட்டும்?’ என்ற கேள்வியையும் எழுப்பியது. இதைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த அருவருப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.” என்றார்.
ஆஷி இந்தச் சுவரை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ மிக விரைவில் வைரலானது.
அடுத்த நாள் காலை, குவாலியரில் வசிப்பவரும், தற்போது முதலாமாண்டு பட்டதாரி மாணவருமான லோகேந்திர சிங் இந்த வீடியோவைப் பார்த்தார்.
லோகேந்திரா ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் ஆவார், அவர் குவாலியர் நகரைத் தனது சமூக ஊடக கணக்குகள் மூலம் விளம்பரப்படுத்தி வருகிறார். குவாலியரில் உள்ள பெரும்பாலான மக்களால் லோகேந்திரா “கேது” என்று அழைக்கப்படுகிறார்.
“ஆஷியின் வீடியோவைப் பார்த்தபோது அவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார், இது ஏன் நடக்கிறது? என்னிடம் பதில் இல்லை, ஆனால் குறைந்தபட்சம் அதைச் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனவே ஒரு பெயிண்ட் டப்பாவை வாங்கி, படங்களில் பெண்களின் அந்தரங்க உறுப்புகள் எங்கு கீறப்பட்டிருந்தனவோ, அங்கெல்லாம் கறுப்பு பெயிண்ட் கொண்டு மறைத்தேன்.” என பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் லோகேந்திரா கூறினார்.
ஆஷி மற்றும் லோகேந்திரா இருவரின் வீடியோக்களும் வைரலான பிறகு, குவாலியர் மாநகராட்சி அந்தச் சுவர்களுக்கும் அந்தப் பகுதியில் உள்ள மற்ற சுவர்களுக்கும் வெள்ளை வண்ணம் பூசியது. பின்னர் ஜனவரி 11 அன்று, நகரின் இளைஞர்களுடன் இணைந்து சில இடங்களில் புதிய ஓவியங்களை வரைந்தது.
குவாலியர் மாநகராட்சி ஆணையர் சங் பிரியா பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “இந்த விஷயம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். நகரின் இளைஞர்களுடன் இணைந்து மாநகராட்சி இதைச் சரிசெய்யத் திட்டமிட்டது. முதலில் மாநகராட்சி சுவர்களுக்கு வெள்ளை வண்ணம் பூசியது, பின்னர் இளைஞர்களுடன் இணைந்து புதிய ஓவியங்களை வரைந்தது,” என்றார்.
“எதையும் சரியாகச் செய்ய தைரியம் தேவை”
இந்த வீடியோவை முதன்முதலில் பார்த்தபோது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாக லோகேந்திரா கூறுகிறார்.
மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு பெரிய பிரச்னைக்கான தீர்வின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்று ஆஷியும் லோகேந்திராவும் கூறுகின்றனர்.
“மாநகராட்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் இது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே. நாம் சுவர்களுக்கு வெள்ளை வண்ணம் பூசுவோம், ஆனால் ஓவியத்தை மாற்றுவதன் மூலம் இதைச் செய்த மக்களின் மனப்பாங்கு சரியாகிவிடுமா?” என்று ஆஷி கேட்கிறார்.
வெளிநாடுகளிலும் இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன

பொது இடங்களில் உள்ள பெண்களின் படங்கள் அல்லது ஓவியங்கள் எளிதான இலக்காக இருப்பதாக ஆஷி கூறுகிறார்.
பெண்களின் உடல்களைச் சித்தரிக்கும் பொதுக் கலைப் படைப்புகளைச் சிதைப்பது புதிய விஷயமல்ல.
2024 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் பெண்கள் உரிமை அமைப்பான ‘டெர் டெஸ் ஃபெம்ஸ்’, உலகெங்கிலும் உள்ள நகரங்களில் உள்ள பெண்களின் வெண்கலச் சிலைகள், மக்கள் தொடர்ந்து தொடுவதால் உடலின் மற்ற பகுதிகளை விட அந்தரங்க பகுதிகள் அதிக நிறமாற்றம் அடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது.
பொது இடங்களில் பெண்களின் உடல்கள் மீதான பாலியல் வன்முறை இயல்பாக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது என்று அந்த அமைப்பு கூறியது.
அதேபோல், அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் உள்ள ஒரு சிலை குறித்தும் நீண்ட காலமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. டப்ளின் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ‘மோலி மலோன்’ (Molly Malone) சிலையின் மார்பகப் பகுதிகள், மீண்டும் மீண்டும் தொடுவதால் வெண்கலத்தின் மற்ற பகுதிகளை விட அதிகப் பளபளப்பாக மாறியுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மக்கள் மோலி மலோன் சிலையைத் தொடுவதைத் தடுக்கப் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பொது இடங்களில் பெண்களின் உடல்கள் நடத்தப்படும் விதம் சங்கடமான ஒன்று என்பதற்கு இவை உதாரணங்கள் என்று ஆஷியும் லோகேந்திராவும் கூறுகின்றனர்.
பொதுக் கலைகளில் பெண்களின் உடல்கள் நடத்தப்படும் விதம் எந்த ஒரு நாட்டிற்கும் தனிப்பட்டது அல்ல என்பதை இந்த சர்வதேச உதாரணங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அது ஒரு சுவர் ஓவியமாக இருந்தாலும் சரி, நகரின் நடுவே நிற்கும் சிலையாக இருந்தாலும் சரி, பெண்களின் அடையாளங்கள் குவாலியரில் ஆஷி கூறும் அதே பாதுகாப்பற்ற சூழலால்தான் சூழப்பட்டுள்ளன.
பெண்களுக்குப் பாதுகாப்பான பொது இடம் எப்படி இருக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஆஷி மற்றும் லோகேந்திரா இருவரும், சமூகம் மற்றும் குறிப்பாக ஆண்கள் தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.
சிறுவர்கள் தங்கள் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று லோகேந்திரா கூறினார், அதே நேரத்தில் பெண்களின் உடை அல்லது பேச்சைக் கொண்டு அவர்களை எடைபோடக் கூடாது என்று ஆஷி கூறினார்.
பெண்களுக்குப் பாதுகாப்பான பொது இடம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஆஷி மேலும் விளக்கினார்.
“நான் தாராளமாகச் சிரிக்கக்கூடிய, யாரிடமாவது பேசினால் நான் எதையோ உணர்த்துவதாக அவர்கள் நினைக்காத, பாலியல் வன்முறை உட்பட எனக்கு அவர்கள் எதையும் செய்ய முடியாது என்று நான் உணரக்கூடிய ஒரு இடமே பாதுகாப்பான சமூகம். எனது ஆடைகள் அல்லது பேச்சைக் கொண்டு நான் மதிப்பிடப்படக் கூடாது,” என்று தெரிவித்தார்.
“ஓவியத்திற்கு வெள்ளை அடிப்பது ஒரு சிறிய விஷயம்… மனநிலையை மாற்றுவதுதான் பெரிய விஷயம். என்னைப் போன்ற சிறுமிகளும், உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரவும், தங்களைச் சுற்றியுள்ள ஆண்களைக் கண்டு அஞ்சாமல் இருக்கவும் இதைச் செய்ய வேண்டும்,” என்று ஆஷி உரையாடலை முடித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு