“டெய்லி இதே தோசைதானா, வேறெதுவும் செய்ய மாட்டியா” என முணுமுணுப்பவர்கள் இருந்தாலும், இந்தியா முழுவதும் ஆர்டர் செய்யப்படும் தோசைகளின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது.
மார்ச் 3-ம் தேதி சர்வதேச தோசை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Swiggy, தோசை தொடர்பான பல சுவாரசியமான தரவுகளை வெளியிட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில், அதாவது பிப்ரவரி 25, 2023 முதல் பிப்ரவரி 25, 2024 வரை, Swiggy தனது வாடிக்கையாளர்களுக்கு 2.9 கோடி தோசைகளை டெலிவரி செய்துள்ளது. காலை உணவுக்காக மட்டும் ஒரு நிமிடத்துக்கு சுமார் 122 தோசைகள் ஆர்டராகியுள்ளன.
தோசைகளை விரும்பிச் சாப்பிடுவதில் ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்கள் முன்னணியில் இருந்தாலும், பெங்களூரைத்தான் தோசைகளின் தலைநகர் என்று சொல்லும் அளவுக்கு தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அங்கு ஆர்டர் செய்யப்படும் தோசைகளின் எண்ணிக்கை டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவைவிட இருமடங்கு அதிகமாகும்.

வெண்ணெய் பராத்தாவை விரும்பி உண்ணும் சண்டிகரில்கூட தற்போது மசாலா தோசை, ஆர்டரில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல ராஞ்சி, கோவை, புனே போன்ற பகுதிகளிலும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் தோசையும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இதேபோல ரம்ஜான், ஐ.பி.எல், உலகக் கோப்பை போன்ற முக்கிய நிகழ்வுகளின்போதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் தோசை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், நவராத்திரி நேரத்திலும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட சைவ உணவு என்ற பெருமையையும் தோசை பெற்றுள்ளது.
காலை மற்றும் இரவு என இரு நேரமும் மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தோசையை, இரவு உணவாக உட்கொள்வதில் முக்கிய நகரமாக சென்னை விளங்குகிறது. அதே நேரத்தில் ஹைதராபாத் தோசையை மாலை நேரச் சிற்றுண்டியாக சாப்பிடுவதில் முதலிடம் பிடித்துள்ளது.
தோசையில் பல வகை இருந்தாலும் ‘கிளாசிக் மசாலா’ தோசைதான் இந்தியா முழுக்க மிகவும் பிடித்த தோசையாக உள்ளது. இதைத் தொடர்ந்து, பிளைன் தோசை, செட் தோசை, வெங்காய தோசை, பட்டர் மசாலா தோசை போன்றவையும் மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றன.

‘தோசை மீதான என் அன்புக்கு ஒரு எல்லையே இல்லை’ எனத் தெரிவித்துள்ளார் கோயமுத்தூரைச் சேர்ந்த தோசை பிரியர் ஒருவர். இவர், கடந்த ஓராண்டில் மட்டும் 447 முறை தோசைகளை ஆர்டர் செய்துள்ளார். இதன் மூலம், ‘தோசை சாம்பியன்’ என்ற பாராட்டைப் பெறுகிறார் என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.