பட மூலாதாரம், SHAHZAD KHAN
மார்ச் 21 அன்று, ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் பலத்த மழை பெய்தது. மஸ்கட்டில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விலாயா பர்கா அருகிலுள்ள ஒரு பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
திடீரென ஒரு கார் பாலத்தின் அடியில் மிதந்து சென்றதைக் காண முடிந்தது. கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர், எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல், காரில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்தார்.
இந்த இளைஞர் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சர்சடாவைச் சேர்ந்த ஷஸாத் கான் ஆவார். நீரோட்டம் வலுவாக இருந்தபோதிலும், கார் ஒரு பாலத்தின் தூணில் மோதி நின்றபோது, ஷஸாத் கான் வெளியே வந்து, கார் கதவின் லாக்கை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த இருவரை மீட்டார்.
ஷஸாத் கான் காணப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிஸ்மில்லா ஜானும் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களில் ஒருவர். அவர் ஷஸாத் கானுடன் அங்கேயே இருந்தார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், “ஷஸாத் என் பக்கத்தில்தான் நின்று கொண்டிருந்தார். பலத்த நீரோட்டம் சென்று கொண்டிருந்தது. திடீரென்று தண்ணீரில் ஒரு கார் மிதப்பதைக் கண்டோம், அடுத்த நொடியே ஷஸாத் அதை நோக்கி ஓடினார்,” என்று கூறினார்.
“நாங்கள் அனைவரும் ஷஸாத்தை தடுக்க முயன்றோம், ஆனால் அவர் நிற்கவில்லை. கார் நின்றபோது, கதவின் லாக்கை உடைப்பதற்காக நான் அவருக்கு கற்களைக் கொடுத்தேன்” என்று பிஸ்மில்லா ஜான் கூறுகிறார்.
இதுகுறித்து ஷஸாத் கான் கூறுகையில், “அங்கு முந்நூறு முதல் நானூறு பேர் வரை இருந்தனர், ஆனால் நீரோட்டம் அவ்வளவு வேகமாக இருந்ததால் யாரும் அருகில் செல்ல துணியவில்லை. என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. கார் எனக்கு அருகில் கடந்தபோது, ஒருவர் உதவியற்ற நிலையில் உதவிக்காக அங்குமிங்கும் பார்ப்பதை நான் கண்டேன்.”
பட மூலாதாரம், SOCIAL MEDIA
வைரல் வீடியோவில் என்ன இருக்கிறது?
இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது, அதில் ஓமனில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பாலத்திற்கு அடியில் வேகமாக பாயும் தண்ணீரும், அதில் கவிழ்ந்த ஒரு வெள்ளை நிற காரும் தென்படுகின்றன.
பாலத்தில் டஜன்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர், சிலர் மிகுந்த கவலையுடன் கீழே பார்க்கிறார்கள்.
வீடியோவில், வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்ட கார், பாலத்தின் தூணில் மோதி நிற்கிறது. அப்போது, பழுப்பு நிற ஆடை அணிந்த ஒரு இளைஞர் பாலத்தின் ஓரத்திலிருந்து கீழே இறங்கி, காரையும் அதற்குள் சிக்கியிருக்கும் நபரையும் அடைய முயற்சிக்கிறார்.
இந்த நேரத்தில், பாலத்தில் நின்றிருந்த மக்களும் அவருக்கு உதவ கீழே குனிகிறார்கள், காயமடைந்த நபரை மேலே இழுப்பதற்காக சிலர் தங்கள் கைகளை நீட்டுகிறார்கள்.
சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, காரில் சிக்கியிருந்த நபரை ஷஸாத் மீட்கிறார். பின்னர், பாலத்தில் இருந்தவர்கள் இணைந்து அவரை மேலே இழுக்கிறார்கள்.
‘என் கண் முன்னே சுவாத் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது’
பட மூலாதாரம், Fazal Subhan
பிபிசியிடம் பேசிய ஷஸாத் கான், ஓமனில் மழை பெய்வது அரிது என்று கூறினார். ஈத் விடுமுறை என்பதால் அன்றைய தினம் நண்பர்களுடன் நடைப்பயிற்சி சென்றதாகவும், மீன்பிடிக்கச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “மீன்களை அறையில் வைத்துவிட்டு நான் வெளியே வந்தபோது, மழை பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது. விலாயா பர்கா பகுதியில் இந்த பாலத்தைச் சுற்றி ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். திடீரென்று தண்ணீரில் ஒரு கார் மிதப்பதைக் கண்டேன். அதில் ஒருவர்தான் இருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் பிறகுதான் உள்ளே இரண்டு பேர் இருந்தது எனக்குத் தெரிந்தது.”
மேலும் பேசிய அவர், “கார் தண்ணீரில் மிதந்தபோது, உள்ளே இருந்த ஒருவர் உதவிக்காக மக்களை உதவியற்ற நிலையில் பார்ப்பதைக் கண்டேன். பாகிஸ்தானின் சுவாத் பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட சோகம் என் கண் முன்னே வந்து போனது.”
“சுவாத்தில் ஒரு சுற்றுலாப் பயணி குடும்பம் நீரில் மூழ்கிய சம்பவமும், அதன் வீடியோவும் என் இதயத்தை உடைத்திருந்தது. யாராவது நினைத்திருந்தால், அவர்களுக்கு உதவியிருக்கலாம்” என்று ஷஸாத் கூறினார்.
2025 ஜூன் மாதம், பாகிஸ்தானின் சுவாத் ஆற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஒரு குடும்பத்தினர் உதவிக்காகக் கெஞ்சுவதும், அந்த வீடியோ வைரலானதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர்களுக்கு யாராலும் உதவ முடியாமல் போனதால் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஷஸாத் கூறுகையில், “ஓடும் நீரில் காரை நிறுத்துவது கடினமாக இருந்தது. நான் ஓரிரு முறை முயற்சித்தேன், ஆனால் அது சாத்தியமில்லை. காரும் தலைகீழாக மாறியது, அதனால் நான் தொடர்ந்து நகர்ந்து அதைப் பிடிக்க முயன்றேன். அப்போது திடீரென கார் பாலத்தின் தூணில் மோதி நின்றது.”
“பிறகு நான் காரை நோக்கிச் சென்றேன். என் நண்பர் பிஸ்மில்லா லாக்கை உடைக்க எனக்கு ஒரு கல்லைக் கொடுத்தார். அந்தக் கல்லால் லாக் உடையவில்லை, அதனால் அவர் எனக்கு இன்னொன்றைக் கொடுத்தார். அதன்பிறகு, நான் லாக்கை இழுத்தேன், அது உடைந்தது. ஒருவேளை கல்லால் தாக்கியதால் அது பலவீனமாகியிருக்கலாம்.”
“முதலில் காரில் ஒருவர்தான் இருப்பதாக நினைத்தேன், ஆனால் கதவைத் திறந்தபோது முன் இருக்கையில் இரண்டு பேர் இருப்பதைப் பார்த்தேன். ஒரு நபர் கீழே விழுந்து கிடக்க, மற்றொருவர் அவர் மேல் இருந்தார். இருவரும் மிகவும் பயந்திருந்தனர்.”
“நான் முதலில் மேலே இருந்த நபரைக் காரில் இருந்து வெளியே இழுத்தேன், பிறகு அடியில் சிக்கியிருந்த நபரை வெளியே இழுத்தேன். பாலத்தில் திரண்டிருந்த ஏராளமானோர் அவர்கள் இருவரையும் பிடித்து மேலே இழுத்தனர்.”
அவர் கூறுகையில், “அங்கு ஏராளமான பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் இருந்தனர். என்னுடன் வேலை செய்யும் சில இந்தியர்களும் அங்கு இருந்தனர்.”

‘காரில் இருந்த இருவருமே இந்தியர்கள் என்று அவர் கூறினார்’
ஷஸாத் கான் கூறுகையில், “அவர் யாராக இருந்தாலும், அந்த நேரத்தில் அவர் ஆபத்தில் இருந்தார். அந்தக் காரில் யார் இருந்திருந்தாலும், நான் நிச்சயமாக அவருக்கு உதவச் சென்றிருப்பேன்.”
ஓமனில் உள்ள பாகிஸ்தான் சமூக மன்றத்தின் இயக்குநர் ஷான்டர் புகாரியின் கூற்றுப்படி, ஷஸாத் காப்பாற்றிய இருவரும் இந்தியர்கள் ஆவர்.
மார்ச் 24 அன்று மஸ்கட் டெய்லி வெளியிட்ட அறிக்கையின்படி, வாகனத்தில் சிக்கியிருந்த இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், அந்த இரு நபர்களின் குடியுரிமையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
மலையாள இணையதளமான ‘மாத்யமம்’, ஷஸாத் காப்பாற்றிய இருவர் இந்தியர்கள் என்று எழுதியுள்ளது.
ஓமனில் உள்ள பாகிஸ்தான் சமூக மன்றத்தின் இயக்குநர் ஷான்டர் புகாரி, “ஷஸாத் கானுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க முயற்சிப்பேன்” என்று கூறுகிறார்.
ஷஸாத் கானின் தந்தை சர்சடாவின் ஷப்காதர் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நான்கு உடன்பிறந்தவர்களில் ஷஸாத் கான் இளையவர். அவர் மேல்நிலை கல்வி பயின்றுள்ளார்.
தான் சிறிது காலத்திற்கு முன்பு கடன் வாங்கி ஓமனுக்கு வந்ததாக ஷஸாத் கான் தெரிவித்தார். அவர் பிபிசியிடம் கூறுகையில், “தினக்கூலி வேலை செய்வதைத் தவிர, நான் ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள் எனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு