சென்னை: ஓபிஎஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இந்தக் கூட்டம் ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார்; ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் கட்சிக் கூட்டம் அல்ல. ஓபிஎஸ் நடத்துவதை தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும். ஓபிஎஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி. ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது. பண்ருட்டி ராமச்சந்திரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது; அவரை விமர்சிக்க மாட்டேன். கண்ணுக்கு தெரிந்து கட்சியின் கொடி, சின்னம், மாவட்ட செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பில் பல்வேறு விழாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஓபிஎஸ் எதையும் செய்யவில்லை. அதற்கான ஆட்களும் இல்லை. அவருக்கு நன்மதிப்பு உள்ளது, அதனை கெடுத்துக்கொள்ள கூடாது. கூடா நட்பை அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்க்கவேண்டும். பாஜகவுடன் தோழமையுடனும், நட்புடனும் இருக்கிறோம். ஆனால் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்தோம், உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவகாசம் உள்ளது. அதற்கான பணிகளை அதிமுக துவங்கியுள்ளது. அந்த நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.
ஓபிஎஸ்-ஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
Share
