போடி: அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டம் போடி, சின்னமனூர் பகுதிகளில் வைத்துள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக பொதுக்குழு வரும் 23ம் தேதி கூடுகிறது. இது தொடர்பான கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நேற்றிரவு சென்னை தி.நகரில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார் மற்றும் காமராஜ் ஆகியோர் சென்றனர். அங்கு அவர்கள் ஓபிஎஸ்சுடன் ஆலோசனை நடத்தினர். இதனிடையே ஒற்றை தலைமை என்ற நிலை உருவானால், அப்பதவியை ஓபிஎஸ்சுக்கு கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக அவரது சொந்த மாவட்டமான தேனியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் தற்போது பேனர்கள் வைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும் எடப்பாடிக்கு மறைமுகமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடியில் நகர செயலாளர் பழனிராஜ், துணைச் செயலாளர் சரவணநதி மற்றும் நிர்வாகிகள் பெயர்களில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ‘அரசியல் ஆசான் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்றும், சின்னமனூரில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாண்டியராஜ், சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் பெயர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட தாயின் தலைமகனே, உயிர் உள்ள வரை ஒரே தலைவர் ஓபிஎஸ்’ என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதே போல் ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ‘தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே, அம்மா அவர்களின் அரசியல் வாரிசு ஓபிஎஸ், கட்சிக்கு தலைமையேற்று, வழி நடத்த வாருங்கள்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, பரவி வருவதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.